சென்னை: மீனவர் பிரச்னை உட்பட எந்த பிரச்னைக்கும் போராடாத அண்ணாமலையை தமிழ்நாடு மக்கள்தான் சவுக்கால் அடிக்க வேண்டும் என திருமுருகன் கூறினார். சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வெளிவந்துள்ள விடுதலை திரைப்படம் உலகத் தரம் வாய்ந்த படைப்பாக உருவாகியுள்ளது.
காஷ்மீர் பைல்ஸ், கேரளா ஸ்டோரீஸ் போன்ற பொய் தகவல்களை வைத்து படம் வந்த நிலையில், பிரதமரே அதை முன்னெடுத்து பேசினார். ஆனால் விடுதலை படம் தமிழர்கள் கொண்டாட வேண்டிய படம். தமிழர்கள் பெருமையுடன் முன்னுக்கு எடுத்து செல்ல வேண்டிய படம். ஆனால் இந்தப் படத்திற்கு தமிழகத்தில் பெரும் அளவு ஆதரவு இல்லாதது வருத்தமாக உள்ளது.
பாஜ தொண்டர்களை ஆயுதம் தூக்க வேண்டாம் என்று தடுத்து வைத்துள்ளேன் என்று அண்ணாமலை சொல்கிறார். ஆயுதம் ஏந்துவது தொடர்பாக பேசுவது, வன்முறையை தூண்டும் செயலாக உள்ளது. இலங்கை மீனவர்களை கைது செய்பவர்கள் மீது அண்ணாமலை படையெடுக்க போகிறாரா, இத்தனை வன்முறையாக பேசிவிட்டு சாட்டையால் அடித்துக் கொள்ளப் போகிறேன் என்கிறார்.
மோடி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, காவிரி உரிமை நிலை நாட்டப்படவில்லை, தமிழகத்திற்கு தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை. கல்விக்கான நிதி தரப்படவில்லை. இதையெல்லாம் பேசாத அண்ணாமலை நாடகம் நடத்துகிறார்.
இவர் செருப்பு போடவில்லை என்றால் என்ன ஆகப் போகிறது. மாஞ்சோலை விஷயம், மீனவர் பிரச்னை, ஒப்பந்த ஊழியர் பணி நிரந்தரம் இவற்றுக்கெல்லாம் போராட்டம் நடத்தினோம். இதுபோன்ற எந்த பிரச்னைக்கும் அண்ணாமலை போராட்டம் நடத்தவில்லை. இதற்கெல்லாம் தமிழக மக்கள்தான் அண்ணாமலையை சவுக்கால் அடிக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் காரணமானவர்கள் உரியமுறையில் தண்டிக்கப்பட வேண்டும். முதல் தகவல் அறிக்கை யாரால் வெளியிடப்பட்டது என்பதை விசாரித்து அவரை கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post மீனவர் பிரச்னை உட்பட எந்த பிரச்னைக்கும் போராடாத அண்ணாமலையை தமிழ்நாடு மக்கள்தான் சவுக்கால் அடிக்க வேண்டும்: திருமுருகன் காந்தி காட்டம் appeared first on Dinakaran.