திருவொற்றியூர்: திருவல்லிக்கேணி நடுக்குப்பத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (61) மற்றும் ராஜூ (35). மீனவர்களான இவர்கள், நேற்று அதிகாலை 3 மணிக்கு, மீன் பிடிக்க தங்களது படகில் கடலுக்குள் சென்றனர். பின்னர் இருவரும் சென்ற படகு மற்றும் வலைகள் மட்டும் விவேகானந்தர் இல்லம் அருகே அதிகலை கரை ஒதுங்கியது. ஆனால் படகில் சென்ற பாஸ்கர் மற்றும் ராஜூ ஆகியோர் குறித்து எந்த தகவலும் இல்லை.
இதையடுத்து மாயமான 2 மீனவர்களை கண்டுபிடித்து தரும்படி அவர்களது குடும்பத்தினர் மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, மாயமான 2 மீனவர்களின் உடல்கள் நேற்று மெரினா கடலில் மிதந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 மீனவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மீனவர்கள் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கடல் சீற்றம் அதிகமாக இருந்த நேரத்தில், மீனவர்கள் கடலுக்குள் சென்ற போது, அப்போது ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி அவர்கள் இருக்கலாம் என தெரியவந்தது. இருந்தாலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் முழு விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
The post மீன்பிடிக்க சென்றபோது கடலில் மூழ்கி 2 மீனவர்கள் பலி appeared first on Dinakaran.