சென்னை: சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது. நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் தமிழ்நாட்டில் எம்.பி. தொகுதிகளின் எண்ணிக்கை 39-ல் இருந்து 31 ஆக குறையும் அபாயம் உள்ளது. மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ள தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மக்கள்தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய தமிழ்நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும் என குற்றம் சாட்டியது.
தமிழகத்தில் எம்பி தொகுதியை குறைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதை எதிர்த்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது. திமுக, தி.க., அதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம், பா.ம.க., மதிமுக, மமக, கொமதேக, தவெக, புரட்சி பாரதம், த.வா.க., மநீம, தேமுதிக, அமமுக, பகுஜன் சமாஜ், முக்குலத்தோர் புலிப்படை, ஆம் ஆத்மி, மூவேந்தர் முன்னேற்றக்கழகம், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்பட அனைத்துக்கட்சி கூட்டத்தில் 56 கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கும் கட்சிகள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில், அதை ஒரு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு அதிகாரப்பூர்வமாக கூட்டம் முடிந்ததும் வெளியிடப்படும். பின்னர் இந்த தீர்மானத்தை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கவும் தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தை பாஜ உள்ளிட்ட ஒரு சில கட்சிகள் புறக்கணிப்பதாகவும் அறிவித்துள்ளது.
The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது: கூட்டத்தில் 56 கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.