இந்தியா – அயர்லாந்து மகளிர் அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் கேபி லீவிஸ் 129 பந்துகளில், 15 பவுண்டரிகளுடன் 92 ரன்களும், லியா பால் 73 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி சார்பில் பிரியா மிஷ்ரா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
239 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய மகளிர் அணி 34.3 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பிரதிகா ராவல் 96 பந்துகளில், ஒரு சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 89 ரன்களும், தேஜல் ஹசப்னிஸ் 46 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 53 ரன்களும், கேப்டன் ஸ்மிருதி மந்தனா 29 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 41 ரன்களும் விளாசினர்.