அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் என்ற நபர், நீதிமன்றத்தால் ரிமாண்ட் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கையிலெடுத்து ஆளும் கட்சிக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர் 26 வழக்குகளில் தொடர்புடையவர் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். 26 வழக்குகளில் தொடர்புடைய ஒரு நபர், சமூகத்தில் சுதந்திரமாக சுற்றித் திரிவதும் ஆளும் கட்சியில் செல்வாக்கு உள்ளவராக இருப்பதும் அமைச்சர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்வதும் காவல்துறையும் ஆளும் அரசும் எந்த அளவுக்கு குற்றவாளிகளிடம் மென்மையாக நடந்து கொள்கின்றன என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.