சென்னை: இந்திய ராணுவத்தின் வீரத்தை போற்றவும், தேச ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையிலும் சென்னை மெரினாவில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை பேரணி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்குமாறு மக்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பாகிஸ்தானின் அத்துமீறல்கள், தீவிரவாத தாக்குதல்களுக்கு எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்துக்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும், ஆதரவையும் வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது. அதை வெளிப்படுத்தும் வகையில், சென்னை மெரினாவில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் இருந்து எனது தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு பேரணி நடைபெறும். தீவுத்திடல் அருகே உள்ள போர் நினைவு சின்னம் அருகே பேரணி நிறைவு பெறும்.