கூடலூர் : கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வனப்பகுதிகளில் காட்டுத்தீ பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளாக வனப்பகுதியில் உள்ள சாலை ஓரங்களில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணிகளை வனத்துறையினர் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். முதுமலை புலிகள் காப்பகம் வழியாக கூடலூரிலிருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.
தெப்பக்காட்டில் இருந்து ஊட்டி செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. இந்த 2 சாலைகளின் இரு புறமும் 6 மீட்டர் வரையில் அகலத்திற்கு காய்ந்த புற்கள் செடி, கொடிகளை எரித்து வனப்பகுதிக்குள் காட்டுத் தீ பரவாமல் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை வனத்துறையினர் ஒவ்வொரு வருடமும் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் வனப்பகுதியின் உள்ளே வனத்துறை வாகனங்கள் செல்லும் சாலைகளிலும் செடி கொடிகள் தீயிட்டு எரிக்கப்பட்டு இந்த தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்படுகின்றன.
இதேபோல் கேரளா கர்நாடகாவை ஒட்டிய எல்லை பகுதிகளில் 10 மீட்டர் அகலத்தில் இந்த தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்படுகின்றன. சாலை ஓரங்களில் ஏற்படும் காட்டுத்தீ வனப்பகுதிக்குள் பரவாமலும், கேரளா கர்நாடகா வனப்பகுதிகளில் ஏற்படும் காட்டுத்தீ முதுமலை வனப்பகுதிக்குள் பரவாமல் தடுக்கும் வகையிலும் இந்த தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகிறது.
முதுமலை புலிகள் காப்பகம் கார்குடி வனப்பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலை ஓரங்களில் தற்போது தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது.
முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் சுமார் 200-க்கும் அதிகமான கிலோ மீட்டர் தூரங்களுக்கு இந்த தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட உள்ளன. இதேபோல் கூடலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளை ஒட்டிய சாலைகள் மற்றும் வனப்பகுதிகளில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
The post முதுமலை வனப்பகுதி சாலை ஓரங்களில் தீ தடுப்பு கோடு அமைக்கும் பணியில் வனத்துறையினர் appeared first on Dinakaran.