சென்னை: பாஜகவினர் நடத்திய மும்மொழி கொள்கைக்கு ஆதரவான கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ விஜயகுமாரை நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி இன்று அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழக பாஜக சார்பில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட பாஜகவினர் பெரியபாளையம் அடுத்த மஞ்சங்கரணையில் வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வினியோகித்து கையெழுத்து இயக்கம் நடத்தி வந்தனர். அப்போது அந்த வழியாக காரில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் சென்று கொண்டிருந்தார். அப்போது, பாஜகவினர் அவரது காரை மறித்து பேசினர்.
அப்போது தங்களுடைய கொள்கை குறித்தும், மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தந்து கையெழுத்திட வேண்டும் என்று கேட்டனர். உடனே முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் பாஜகவினரின் மும்மொழி கொள்கைக்கு ஆதரவான கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டார். அப்போது அதனை புகைப்படக்காரர்கள் படம் எடுப்பதை பார்த்ததும் சுதாரித்து கொண்டு, நான் மனதளவில் உங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி காரில் ஏறி புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் மும்ெமாழிக்கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டதற்காக அவரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி இன்று நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்ட அறிவிப்பு: அதிமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏவும், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளருமான விஜயகுமார் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சியினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.
The post மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்ட கும்மிடிப்பூண்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் நீக்கம் appeared first on Dinakaran.