சென்னை: தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால், வடமாநிலங்களைப் போல தாய்மொழியை முற்றிலும் புறக்கணித்து சமஸ்கிருதமயமாக்கும் திட்டம்தான் எதிர்காலத்தில் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
திமுக தலைவர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இந்தியைப் படித்தால் தமிழ் அழிந்துவிடும் என்று திமுக பயப்படுகிறதா எனக் கேட்கின்ற ஒரு கூட்டத்தார் இன்று நேற்றல்ல, பெரியார் முன்னெடுத்த 1937-39 மொழிப் போராட்டத்தின் போதும் இருந்தனர். இந்தி மொழியை ஏற்றுக்கொண்ட பீகார் மாநில மக்களின் சொந்த மொழியான மைத்திலி, அந்த மாநிலத்தின் அடுத்தடுத்த தலைமுறையினர் அறிய முடியாதபடி வழக்கொழிந்தது. இந்தியாவின் பெரிய மாநிலம் உத்தரபிரதேசம். இந்திதான் அந்த மாநிலத்தின் தாய்மொழி எனப் பலரும் நினைப்போம். உண்மை அதுவல்ல. வடமேற்கு உத்தரபிரதேச மக்களின் மொழி பிரஜ்பாஷா, தென்மேற்கு உத்தர பிரதேசத்தின் தாய்மொழி புந்தேல்கண்டி.
வடகிழக்கு உத்தரபிரதேசத்தின் சொந்த மொழி போஜ்புரி. மத்திய உத்தரபிரதேசத்தின் உள்பகுதிகளில் பேசப்பட்டு வந்த மொழி ஆவ்தி. அத்துடன், கண்ணோஜி என்ற மொழியும் இப்பகுதியில் வழக்கில் இருந்தது. உத்தரபிரதேசத்தில் இருந்து பிரிக்கப்பட்ட மாநிலமான உத்தரகாண்டில் வாழும் மக்களின் பூர்வீக மொழி கடுவாலி மற்றும் குமோனி. மண்ணின் மைந்தர்களுடைய மொழிகள் அனைத்தையும் இந்தி என்கிற ஆதிக்க மொழியின் படையெடுப்பு சிதைத்துவிட்டது.
இவை மட்டுமா? ஹரியாண்வி, ராஜஸ்தானி, மார்வாரி, மேவாரி, மால்வி, நிமதி, பகேலி, ஜார்கன்ஷி, சந்த்தலி, சட்டீஸ்கரி, கோர்பா உள்ளிட்ட மொழிகள் பேசுவோரைத் தேட வேண்டியுள்ளது. வடஇந்திய மாநிலங்களில் 25க்கும் மேற்பட்ட அந்தந்த மண்ணின் தாய்மொழிகளை கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் இந்தி-சமஸ்கிருதம் எனும் ஆதிக்க மொழிகளின் படையெடுப்பு சிதைத்திருக்கிறது.
தமிழ் மண்ணிற்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத, தமிழர்களின் பண்பாட்டிற்கு நேரெதிரான கொள்கைகளைக் கொண்ட பா.ஜ.வும் அதன் கூலிப்படையினரும், மூன்றாவது மொழியாக, இந்தியாவில் உள்ள எந்த மொழியை வேண்டுமானாலும் படிக்கலாம். அயல்நாட்டு மொழிகளைக் கூடக் கற்கலாம்” என்று ஒரு ‘தினுசாக’ப் பேசுகிறார்கள். மும்மொழித்திட்டம் என்ற பெயரில் என்னென்ன மொழிகள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன என அட்டவணையைப் பார்த்தால் பெரும்பாலான மாநிலங்களில் இந்தி அல்லது சமஸ்கிருதமே முன்னிலைப்படுத்தப்படுகிறது.
தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால், வடமாநிலங்களைப் போல தாய்மொழியை முற்றிலும் புறக்கணித்து சமஸ்கிருதமயமாக்கும் திட்டம்தான் எதிர்காலத்தில் நிறைவேற்றப்படும்.
தேசிய கல்விக் கொள்கை 2020ன்4.17வது பிரிவு, “இந்தியஅரசியல் சட்டத்தின் 8வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள செம்மொழியான சமஸ்கிருதம் இலக்கியம், கணிதம், அறிவியல், மருத்துவம், தத்துவம், இசை, அரசியல் இன்ன பிற உள்ளிட்ட பல்வேறு கலைச்செல்வங்களைக் கொண்டுள்ளது, இதனால் சமஸ்கிருத மொழி பள்ளிகளிலும், உயர்கல்வியிலும் அனைத்து நிலைகளிலும் மும் மொழித் திட்டத்தில் ஒன்றாக மாணவர்களுக்கு கற்றுத்தரப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகே, மூத்த மொழியான தமிழ் மற்றும் இந்தியாவின் பிற மொழிகள் பற்றி 4.18வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுவும், சமஸ்கிருதத்துடன் கூடுதலாக தமிழ் உள்ளிட்ட மொழிகளைக் கற்பதற்கு ஆன்லைன் முறையில் வாய்ப்பளிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், சமஸ்கிருதத்தை திணிக்கவும், தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளைப் புறங்கையால் ஓரங்கட்டவும் திட்டமிட்டே ஒன்றிய பா.ஜ.க. அரசு தேசியக் கல்விக் கொள்கையையும் அதன் வழியாக மும்மொழித் திட்டத்தையும் நம் மீது திணிக்கிறது என்பது தெளிவாகிறது.
The post மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் சமஸ்கிருதமயமாக்கும் திட்டம்தான் எதிர்காலத்தில் நிறைவேற்றப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் appeared first on Dinakaran.