சென்னை: மெட்ரோ ரயில் நிலையத்துக்காக யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன கட்டிடத்தை கையகப்படுத்துவது தொடர்பான நோட்டீசை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக, ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் உள்ள பழமையான ரத்தின விநாயகர் மற்றும் துர்க்கை அம்மன் கோவில் ராஜ கோபுரத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆலயம் காப்போம் கூட்டமைப்பு சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மெட்ரோ ரயில் நிலைய நுழைவு, வெளியேறும் பாதை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன வளாகத்தில் மாற்றப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்ததை பதிவு செய்துகொண்டு வழக்கை முடித்து வைத்தது.இந்நிலையில், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் 837 சதுர மீட்டர் பரப்பு நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த நோட்டீசை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஏற்கனவே முன் அனுமதி பெற்று 200 கோடி ரூபாய் செலவில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் கட்டுமானங்கள் மேற்கொண்டுள்ள நிலையில், உயர் நீதிமன்றத்தில் தெரிவித்த உத்தரவாதத்தை செயல்படுத்தும் விதமாக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறி, அந்த நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து, ஆலயம் காப்போம் கூட்டமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன கட்டிடத்தின் முன்புள்ள காலி இடத்தை தான் கையகப்படுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி இருந்ததாக ஆலயம் காப்போம் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல், ஏற்கனவே உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள ஆட்சேபம் இல்லை என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பான நோட்டீசை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் மேல்முறையீட்டு மனுவுக்கு நான்கு வாரங்களில் பதில் அளிக்கும்படி யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
The post மெட்ரோ ரயில் திட்டத்திற்காக யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கட்டிடத்தை கையகப்படுத்தும் நோட்டீஸ் ரத்துக்கு தடை: ஐகோர்ட் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு appeared first on Dinakaran.