மதுரையில் ஆடு, மாடுகளை வைத்து வித்தியாசமான மாநாடு நடத்தி தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். மாடுகளை வைத்து நடைபெறும் பால் பொருள் வர்த்தகம் ரூ.13.5 லட்சம் கோடி என்றும், அதில் தமிழகத்தின் பங்கு ரூ.1.38 லட்சம் கோடி என்றும் குறிப்பிட்டுள்ள சீமான், மாடுகளுக்கான மேய்ச்சல் நிலங்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் இருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
நாடு முழுவதுமுள்ள 1.7 கோடி ஹெக்டேர் மேய்ச்சல் நிலங்களில் தமிழகத்தில் இருக்கும் அளவு 12 லட்சம் ஹெக்டேர். ஆனால், அவை அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள் கட்டுவதற்காகவும், வீட்டு மனைகளாகவும், சாலை அமைக்கவும், விமான நிலையங்கள் அமைக்கவும் எடுக்கப்பட்டு விட்டதால் மாடுகள் மேய்ச்சல் நிலம் இன்றி தவிக்கின்றன.