மதுரை: மதுரை மேலூர் பகுதியில் 5,000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்தை அனுமதிக்கக் கூடாது. இதனால் தமிழகத்தின் முதல் பல்லுயிர் தலமான அரிட்டாபட்டி உள்ளிட்ட 10 கிராம மக்கள் அகதிகளாகும் சூழல் உள்ளதால் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப் பாளர் ரா.சா.முகிலன் தலைமையில் கிராம மக்கள் இன்று (நவ.18) மனு அளித்தனர்.
அந்த மனுவின் விவரம்: கடந்த நவ.7-ல், ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் என்ற பெயரில் 5,000 ஏக்கர் பரப்பளவில் மதுரை மேலூர் வட்டத்தில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசிடம் ஏலம் எடுத்துள்ளது. இதனால் தெற்குத் தெரு, முத்துவேல்பட்டி, குளனிப்பட்டி, கிடாரிப்பட்டி, எட்டிமங்கலம், அரிட்டாபட்டி, வெள்ளாளப்பட்டி, சிலீப்பியாபட்டி, செட்டியார்பட்டி, நாயக்கர் பட்டி எனும் 10 கிராம மக்கள் அகதிகளாகும் நிலை உள்ளது.