சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று (21.01.2025) இரவு 7.30 மணிக்கு சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி – மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட் அணிகள் மோதுகின்றன.
மெரினா மச்சான்ஸ் என அழைக்கப்படும் சென்னையின் எஃப்சி அணி 16 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 5 டிரா, 7 தோல்விகளுடன் 17 புள்ளிகள் பெற்று பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட் 36 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. சென்னையின் எஃப்சி அணி கடைசியாக விளையாடிய 4 ஆட்டங்களில் வெற்றி பெறவில்லை. அந்த அணி 2 போட்டிகளை டிரா செய்தது, 2 போட்டியில் தோல்வியை சந்தித்தது. இதனால் வெற்றி வறட்சிக்கு அந்த அணி முற்றுப்புள்ளி வைக்க முயற்சிக்கக்கூடும்.