நாகர்கோவில்: ‘மோடி அரசே தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன்’ என்ற பெயரில் நாகர்கோவில் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. புதிய கல்விக்கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டிற்கு நிதி என்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். இதற்கு திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. மேலும் தமிழ்நாட்டில் பாஜ தவிர அனைத்து கட்சிகளும் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. தமிழ்நாட்டின் உரிமைகளை சிதைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் ஒன்றிய மோடி அரசு எடுத்து வருகிறது.
புதிய கல்விக்கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாடு கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மிரட்டுகிறார் என்று திமுக குற்றம்சாட்டியிருந்தது. இந்தநிலையில் ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், ‘மோடி அரசே, தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன்?, திட்டங்களில் தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து இந்தியை திணிக்க, நிதியை மறுத்து மிரட்டி பார்க்கிறது மோடி அரசு, தமிழன்னையை அவமதித்து, தமிழர்களை இழிவுபடுத்துகிறது, பாஜக அமைச்சர்களின் ஆணவ பேச்சு, தமிழ்நாடே கிளர்ந்தெழு, ஓரணியில் கொட்டிடு போர்முரசு’ என்று தெரிவிக்கப்பட்டு ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
The post மோடி அரசே தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன்?.. நாகர்கோவிலில் பரபரப்பு போஸ்டர்கள் appeared first on Dinakaran.