சென்னை: ‘சுயநலவாதிகளான தலைவர்களால் கம்யூனிஸ கொள்கை தோற்றது’ என்று ஆ.ராசா எம்பி பேசியதை கண்டித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், “திமுகழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் என்ற தலைமைப் பொறுப்பில் இருந்து வரும் ஆ.ராசா, இப்படி பொறுப்பற்ற முறையில் பேசி வருவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். யாகாவாராயினும் நாகாக்க” என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் நேற்று (07.01.2025) நடந்த நிகழ்வில் பங்கேற்று பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா “கம்யூனிஸ்டுகள் சுயநலவாதிகளாக மாறிவிட்ட காரணத்தால் கொள்கை தோற்றுப் போய் விட்டது” என்ற அரிய கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளார். கம்யூனிஸ்டு தத்துவத்தின் மீது தலைவர்கள் வைக்கும் நம்பிக்கை குறைந்து விட்டது என்ற அவதூறுச் செய்தியை ஆதாரமாக காட்டுகிறார்.