ஓவியர் மோனிகா, சென்னைக் கவின்கலை கல்லூரியிலும் பரோடா கவின் கலைக் கல்லூரியிலும் ஓவியம் பயின்றவர். இந்தியாவுக்கு வெளியே பிரான்ஸ், அமெரிக்காவில் ஓவியங்களைக் காட்சிப்படுத்தியுள்ளார். ‘இந்திய ஓவிய உன்னதங் கள்’ (எதிர் வெளியீடு) என்கிற தலைப்பில் இந்திய ஓவியக் கலை ஆளுமைகள் குறித்து ஒரு நூலை எழுதியுள்ளார்.
மோனிகாவின் ஓவியங்களில் யானை பிரதான அம்சமாக இருக்கிறது. யானை, பெரிய உருவத்தை யும் அந்த உருவத்துக்கு நேர் எதிரான வெள்ளந்தித்தனத்தையும் கொண்டது. இந்த முரண் யானையின் வசீகரங்களில் ஒன்று. குழந்தைகளுக்கு யானை பிடித்துப் போவதற்கு இந்த முரணான வசீகரம்தான் காரணம் எனலாம். மோனிகாவின் சிறுவயதில் அவரது தெருவில் பார்த்த கடைகளைவிட உயரமான யானையின் உருவம் ஒரு அகலாத சித்திரமாக அவர் மனத்தில் உருக்கொண்டிருக்கிறது. “அந்த யானை தெருவுக்கே சந்தோஷத்தைக் கொண்டு வரும்” என்று மோனிகா அந்த நினைவை அசைபோடுகிறார். அந்த யானை மோனிகாவின் ஓவியத்தில் நேரடியாகவும் மறைபொருளாகவும் இன்றும் அசைந்து கொண்டிருக்கிறது.