சென்னை: “அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையில்,வேறு யாராவது குற்றவாளி இருப்பதாக தெரியவந்தால், அது யாராக இருந்தாலும் சரி அவர்கள் மீது தயவு தாட்சணியமின்றி காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். இந்த வழக்கில் விரைந்து விசாரணை மேற்கொண்டு 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். யார் அந்த சார்? என்ற கேள்விக்கு ஆதாரங்கள் இருந்தால், எதிர்க்கட்சிகள் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் கொடுக்கலாம். அதைவிடுத்து மலிவான செயலில் ஈடுபட வேண்டாம்,” என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாம் நாளான இன்று (ஜன.8) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இந்நிலையில், பேரவையில், அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துப் பேசினார்.