எட்டயபுரம்: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் ரூ.6 கோடிக்கு மேல் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தென்தமிழகத்தின் புகழ்பெற்ற ஆட்டுச் சந்தைகளில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆட்டுச் சந்தை ஒன்று. வாரந்தோறும் சனிக்கிழமையில் நடைபெறும் இந்த சந்தையில், ஆடுகளை வாங்குவதற்காக சென்னை, கோவை, நெல்லை, மதுரை, திருச்சி, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வருகை தருவர்.
இதனால் வாரந்தோறும் சுமார் ரூ.4 கோடிவரை விற்பனை நடைபெறும். தீபாவளி, பொங்கல், ரம்ஜான் மற்றும் திருமண முகூர்த்த காலங்களில் ஆடுகள் விற்பனை களை கட்டுவதோடு சுமார் ரூ.6 கோடி முதல் ரூ.10 கோடி வரை விற்பனை நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு ரம்ஜான் பண்டிகை நாளை (31ம் தேதி) கொண்டாடப்படும் நிலையில், நேற்று எட்டயபுரம் ஆட்டுச்சந்தை களைகட்டியது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விளாத்திகுளம், கடம்பூர், எட்டயபுரம், எப்போதும்வென்றான், கழுகுமலை ஆகிய பகுதிகளில் இருந்தும், நெல்லை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் வெள்ளாடுகள், நாட்டு செம்மறி ஆடுகள், மயிலம்பாடி, குறும்பை, சீனி ஆடுகள் விற்பனைக்கு வந்தன. இதனை வாங்குவதற்காக நெல்லை, நாகர்கோவில், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி, சென்னை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்திருந்தனர்.
இவர்கள் போட்டிப் போட்டு கொண்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர். வளர்ந்த ஆடுகள் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.28 ஆயிரம் வரை விலை போனது. ஆட்டுக்குட்டி ரூ.700க்கு விற்பனை செய்யப்பட்டது. சுமார் 8 ஆயிரம் ஆடுகள் வரை விற் பனைக்கு கொ ண்டு வரப்பட்டன. ரூ.6 கோ டிக்கு மேல் விற்பனை நடந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
The post ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு எட்டயபுரம் சந்தையில் ரூ.6 கோடிக்கு விற்பனை appeared first on Dinakaran.