மதுரை: மூத்த குடிமக்களுக்கான பயணச்சலுகை விபரம் குறித்து, ஒன்றிய அரசு அளித்துள்ள தகவல்களுக்கு மதுரை எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார். 2021 – 2024 அக்டோபர் வரை எத்தனை முறை மூத்த குடிமக்கள் ரயிலில் பயணம் செய்துள்ளார்கள். மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகையை திரும்ப பெற்றதன் மூலம் இதே காலகட்டத்தில் ஒன்றிய அரசுக்கு எவ்வளவு தொகை சேமிப்பாக கிடைத்துள்ளது என, கடந்த 13ம் தேதி நாடாளுமன்றத்தில் மதுரை எம்பி சு.வெங்கடேசன் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு, அவர் அளித்துள்ள பதில் குறித்து, எக்ஸ் தளத்தில் எம்பி சு.வெங்கடேசன் பதிவிட்டுள்ளதாவது:
அமைச்சரின் பதிலில் மூத்த குடிமக்கள் எத்தனை முறை பயணம் செய்துள்ளார்கள் என்ற விவரம் தரப்படவில்லை. மாறாக 2021ல் துவங்கி 2024 அக்டோபர் வரை மொத்த பயணிகள் 2,230 கோடி முறை பயணித்துள்ளனர் என்று பதில் அளித்துள்ளார். எனது கேள்விக்கான பதிலை தவிர்ப்பதன் மூலம் மூத்த குடிமக்களின் கட்டணச் சலுகை ரத்தானதால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு எவ்வளவு என்கிற தகவலை மறைத்துள்ளது. மூத்த குடிமக்கள் சம்பந்தமான தகவலை மறைப்பதன் மூலம் அவர்களின் கோபத்தை வடித்து விடமுடியாது. அதே நேரம், இம்மாதம் வெளிவந்துள்ள ஒன்றிய அரசின் ‘நியூ இந்தியா சமாச்சார்’ இதழில் மூத்த குடிமக்கள் 63 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தாங்களாகவே முன் வந்து ரயில் பயணசலுகையை விட்டுக்கொடுத்துள்ளனர் என்று கூறியுள்ளனர்.
மூத்த குடிமக்கள் எத்தனை முறை பயணம் செய்தனர் என்பதையே தர மறுக்கிற ரயில்வே அமைச்சகம். பயணச்சலுகையை திருப்பித் தந்தவர்களின் விபரத்தை எங்கிருந்து எடுத்தது? அதுமட்டுமல்ல, பறிக்கப்பட்டதை எப்படி விட்டுக் கொடுக்கமுடியும்? இந்த 63 லட்சம் பேர் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற விபரத்தை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
The post ரயிலில் கட்டண சலுகையை விட்டுக்கொடுத்த 68 லட்சம் மூத்த குடிமக்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள்..? ஒன்றிய அரசுக்கு மதுரை எம்.பி கேள்வி appeared first on Dinakaran.