பெரம்பூர்: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்து கைதிகள் வார்டுக்கு பாம் சரவணன் மாற்றப்பட்டுள்ளார். இவரை 30ம்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை வியாசர்பாடி குட்செட் பகுதியில் பிரபல ரவுடி பாம் சரவணன் நேற்று முன்தினம் இரவு போலீசாரால் காலில் சுட்டு பிடிக்கப்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இன்று பாம் சரவணன், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகள் தங்கும் வார்டுக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், பாம் சரவணனை வரும் 30ம்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்ற 10வது நீதித்துறை நடுவர் ரேவதி உத்தரவிட்டார். இந்நிலையில் பாம் சரவணன் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், கோயம்பேட்டை பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான பன்னீர் செல்வத்தை ஆந்திரா எல்லைக்கு அழைத்து சென்று எரித்து கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த கொலை குறித்து கோயம்பேடு போலீசார் பாம் சரவணனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். விசாரணையின்போது யார், யார் கொலையில் ஈடுபட்டார்கள் என்பது தெரியவரும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
The post ரவுடி பாம் சரவணனுக்கு 30ம்தேதி வரை நீதிமன்ற காவல்: அறுவை சிகிச்சை முடிந்து கைதிகள் வார்டுக்கு மாற்றம் appeared first on Dinakaran.