புதுடெல்லி: ரஷ்ய ராணுவத்தில் பணியில் இருந்த கேரள மாநிலத்தை சேர்ந்தவர் யுத்த களத்தில் தாக்குதலில் உயிரிழந்த நிலையில் அங்கு ராணுவப் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியர்கள் அனைவரையும் விரைந்து விடுவிக்க வேண்டும் என இந்தியா மீண்டும் கோரிக்கை வைத்துள்ளது. இதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் உறுதி செய்துள்ளார்.
“ரஷ்ய நாட்டு ராணுவத்தில் பணியில் இருந்த கேரளவைச் சேர்ந்த இந்தியர் உயிரிழந்த தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது. இது துரதிர்ஷ்டவசமானது. தாக்குதலில் காயமடைந்த மற்றொரு இந்தியர் மாஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் அவர்களது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசி உள்ளது. இயன்ற வரையில் அவர்களுக்கு அனைத்து சாத்தியமான உதவிகளும் வழங்கப்படும்.