சிரியாவில் இருந்து ரஷ்யாவுக்கு அதிபர் ஆசாத் தப்பியது குறித்த பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேவேளையில், “யார் மீதும் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட மாட்டோம்" என்று கிளர்ச்சி குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் ஷியா பிரிவை சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும் சன்னி பிரிவை சேர்ந்த கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே கடந்த 13 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வந்தது. துருக்கி ஆதரவு பெற்ற ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (எச்டிஎஸ்), சிரியா தேசிய படை, அமெரிக்க ராணுவத்தின் ஆதரவு பெற்ற பிரீ சிரியா படை உள்ளிட்ட பல்வேறு கிளர்ச்சிக் குழுக்கள் சிரியா அரசுக்கு எதிராக போரிட்டு வந்தன. சிரியா அதிபர் ஆசாத்துக்கு ரஷ்யாவும் ஈரானும் ஆதரவு அளித்து வந்தன. இந்த சூழலில் துருக்கி ஆதரவு கிளர்ச்சி குழுக்கள் கடந்த 8-ம் தேதி சிரியா தலைநகர் டமாஸ்கஸை கைப்பற்றின. அதிபர் ஆசாத் ரஷ்யாவுக்கு தப்பியோடி விட்டார்.