வாஷிங்டன்: ரஷ்யா உடனான போரை நிறுத்த சம்மதிக்காததால் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான வார்த்தை மோதலில் ஈடுபட்டார். இந்த மோதலைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை பாதியில் நிறுத்தப்பட்டது. கனிம ஒப்பந்தம் கையெழுத்து, விருந்து உபசரிப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. உடனடியாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெள்ளைமாளிகையில் இருந்து வெளியேறினார்.
ரஷ்யா, உக்ரைன் இடையேயான போர் கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போர் கடந்த 2022ல் தொடங்கியதில் இருந்தே உக்ரைனுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளித்து வருகிறது. முன்னாள் அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் முழுக்க முழுக்க ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்தது. இதனால் ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து அமெரிக்காவும் உக்ரைனை ஆதரித்து, உலக மன்றங்களில் ரஷ்யாவை தனிமைப்படுத்தின. உக்ரைன் விவகாரத்தை தனது வெளியுறவுக் கொள்கையின் மையப்பகுதியாகஅமெரிக்கா மாற்றியது.
ரஷ்யாவை எதிர்த்து போரிட உக்ரைனுக்கு ரூ.5.60 லட்சம் கோடியை ஆயுதங்களாகவும், பாதுகாப்பு நிதியாகவும் வழங்கி உள்ளது. இதற்காக ஒவ்வொரு அமெரிக்கருக்கும் நன்றி தெரிவிப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறார். உள்நாட்டு அரசியலில் எதிர்ப்புகள் இருந்தாலும் பைடன் நிர்வாகம் உக்ரைன் ஆதரவை தொடர்ந்தார். ஆனால் அமெரிக்காவில் சமீபத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பின் நிலைமை தலைகீழ் ஆனது. 2வது முறையாக கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்துவதாக தனது பிரசாரத்திலேயே வாக்குறுதி அளித்தார்.
அதன்படி, அதிபரானதும் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சவுதி அரேபியாவில் அமெரிக்கா, ரஷ்யா நாட்டு பிரதிநிதிகள் போர் நிறுத்த பேச்சுவார்த்தையை நடத்தினர். ஆனால், இந்த விவகாரத்தில் அதிபர் டிரம்ப், உக்ரைனை முற்றிலும் புறக்கணித்தார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சர்வாதிகாரி என விமர்சித்த டிரம்ப், போரை பயன்படுத்தி தேர்தலே நடத்தாமல் அவர் சொந்த மக்களை பலிகொடுக்கிறார் என குற்றம்சாட்டினார்.
இதனால், உக்ரைன் இல்லாமல் அமெரிக்கா தலைமையில் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதுமட்டுமின்றி, போர் நிறுத்தத்திற்கு சம்மதிக்க வேண்டும், இவ்வளவு நாள் போருக்காக நிதி உதவி செய்ததற்கு ஈடாக உக்ரைனில் அரியவகை கனிமங்களை வெட்டி எடுக்க அனுமதி தர வேண்டுமென உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு டிரம்ப் நெருக்கடி கொடுத்தார்.
போரை நிறுத்தினாலும், ரஷ்யா இனியும் தாக்குதல் நடத்தாது என்பதற்கான பாதுகாப்பு உத்தரவாதம் தங்களுக்கு அளிக்கப்பட வேண்டுமென ஜெனல்ஸ்கி வலியுறுத்தினார். இதற்கு டிரம்ப் பிடிகொடுக்காமல் இருந்ததால் வேறு வழியின்றி, பாதுகாப்பு உத்தரவாதங்கள் ஏதுமின்றி அமெரிக்காவுடன் கனிம ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஜெலன்ஸ்கி சம்மதித்தார். பாதுகாப்பு உத்தரவாதத்துடன் கூடிய அமைதிக்கான முதல் படியாக இந்த ஒப்பந்தம் இருக்கும் என ஜெலன்ஸ்கி நம்பிக்கை தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட நேற்று முன்தினம் அவர் அமெரிக்கா சென்றார். டிரம்ப் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஜெலன்ஸ்கியின் முதல் அமெரிக்க பயணம் என்பதால் இது உலக அரங்கில் பெரிதும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது.
வெள்ளை மாளிகை சென்றடைந்த ஜெலன்ஸ்கியை அதிபர் டிரம்ப் வழக்கம் போல் வாசலுக்கு வந்து கைகுலுக்கி வரவேற்றார். இதைத் தொடர்ந்து, அதிபர் டிரம்ப், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்ற பேச்சுவார்த்தை ஓவல் அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடந்தது. உலகம் முழுவதும் இந்த சந்திப்பு செய்தி சேனல்களில் ஒளிபரப்பானது. முதல் அரைமணி நேர பேச்சுவார்த்தை மிக சுமூகமாக நடந்தது. உக்ரைனில் ரஷ்யாவின் போர் குற்றங்கள் குறித்த புகைப்பட ஆதாரங்களை ஜெலன்ஸ்கி, டிரம்பிடம் காட்டினார்.
அப்போது, இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் ராஜதந்திரத்தை பற்றி துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பேசியது உக்ரைன் அதிபர் ஜெனல்ஸ்சிக்கு சுரீர் என கோபத்தை ஏற்படுத்தியது. அமெரிக்கா-ரஷ்யா இடையேயான நேரடி பேச்சுவார்த்தையை விமர்சித்த அவர் ‘இதில் எந்த மாதிரியான ராஜதந்திரம்?’ என கேள்வி கேட்டதோடு, இதற்கு முன் மேற்கொள்ளப்பட்ட போர் ஒப்பந்தத்தை மீறி ரஷ்யா ஒவ்வொரு முறை தங்கள் மீது தாக்குதல் நடத்திய போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கை கட்டி வேடிக்கை பார்த்தது’ என்று குற்றம்சாட்டினார். அத்தனை பத்திரிகை முன்பாக ஜெலன்ஸ்கி சத்தம் போட்டு குற்றம்சாட்டியதை விரும்பாத துணை அதிபர் வான்ஸ் ‘இது அவமரியாதை’ என கண்டித்தார்.
அதைத் தொடர்ந்து அதிபர் டிரம்ப் கொதித்தெழுந்தார். ‘லட்சக்கணக்கான மக்களின் உயிருடன் நீங்கள் சூதாட்டம் நடத்துகிறீர்கள். 3ம் உலகப் போருக்கு நீங்கள் வழிவகுக்கிறீர்கள்’ என ஜெலன்ஸ்கியுடன் நேரடி வாக்குவாதம் செய்தார். ‘‘அமெரிக்கா போரை நிறுத்தி உங்கள் மக்களை காக்க போராடுகிறது. ஆனால் நாங்கள் செய்த உதவிகளுக்கு நன்றியுள்ளவராக ஜெலன்ஸ்கி இல்லை’’ என துணை அதிபர் வான்ஸ் குற்றம்சாட்டினார். இதனை மறுத்து ஜெலன்ஸ்கி பதிலளிக்க முற்பட்ட நிலையில், ‘‘வேண்டாம். ஏற்கனவே நீங்கள் ரொம்ப பேசிட்டீங்க. நாங்க இல்லாமல் உங்களால் எதுவும் செய்ய முடியாது. அமெரிக்கா உதவவில்லை என்றால் இந்த போர் 2 வாரத்தில் முடிந்திருக்கும். உங்களிடம் எதுவுமில்லை. போதுமான வீரர்கள் இல்லை, ஆயுதங்கள் இல்லை. இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டால், நல்ல நிலையில் இருக்கலாம். ஆனால் அதற்கு நீங்கள் தயாராக இருப்பதாக தோன்றவில்லை. இது நல்ல விஷயமல்ல. உண்மையாக சொல்கிறேன், இது நல்லதில்லை’’ என அதிபர் டிரம்ப் கூறியதோடு, பேச்சுவார்த்தை பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
அதிபர்கள் டிரம்பும், ஜெலன்ஸ்கியும் தனித்தனி அறைகளுக்கு சென்றனர். வெள்ளை மாளிகையில் எஞ்சிய நிகழ்ச்சிகளான கனிம ஒப்பந்தம், கூட்டாக பத்திரிகையாளர் சந்திப்பு, மதிய விருந்து ரத்து செய்யப்பட்டது. அதனால் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடனடியாக காரில் ஏறி புறப்பட்டு சென்று விட்டார். திட்டமிட்டபடி அடுத்த பயணமாக அவர் இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மரை சந்திக்க லண்டன் சென்றார். அமெரிக்க அதிபருடன் மற்றொரு நாட்டு தலைவர் வெள்ளை மாளிகையில் வாக்குவாதம் செய்த சம்பவம் இதுவரை எப்போதும் நடந்திராத ஒன்று. இந்த விவகாரம் உலக அளவில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
அதே சமயம், இனி போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்து வரும் ஆதரவு எப்படிப்பட்டதாக இருக்கும் என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது. அமெரிக்கா கைவிட்டாலும் தங்களின் ஆதரவு எப்போதும் தொடரும் என உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் வாக்குறுதி அளித்துள்ளன. எனவே டிரம்ப்-ஜெலன்ஸ்கி சந்திப்பு ரஷ்யா-உக்ரைன் போரில் மிகப்பெரிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
காரசார உரையாடலில் நடந்த வாக்குவாதம்
ஓவல் அலுவலகத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே காரசார வாக்குவாதத்தில் நடந்த உரையாடல்:
ஜே.டி.வான்ஸ்: கடந்த 4 ஆண்டுகள், ரஷ்ய அதிபர் புடினை பற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் மட்டுமே கடுமையாக பேசக் கூடிய அதிபரை அமெரிக்கா கொண்டிருந்தது. அமைதிக்கான பாதை, செழிப்பிற்கான பாதை ராஜதந்திரத்தில் ஈடுபடுவதுதான். அது தான் அமெரிக்காவை நல்ல நாடாக காட்டும். அதைத் தான் அதிபர் டிரம்ப் செய்கிறார்.
ஜெலன்ஸ்கி: சில விஷயங்களை நான் சொல்ல ஆசைப்படுகறேன். கடந்த 2014ல் உக்ரைனின் கிழக்கில் பெரிய பகுதிகளை புடின் ஆக்கிரமித்தார். கிரிமியாவை கைப்பற்றினார். எனவே இது முன்னாள் அதிபர் பைடன் மட்டும் சம்மந்தப்பட்ட விஷயமல்ல. அதிபர் ஒபாமா, பின்னர் டிரம்ப், பைடன் ஆட்சிக்காலங்களில் தொடர்கிறது. இப்போது புடினை தடுப்பதாக கூறுகிறீர்கள். 2014ல் புடினை யாரும் தடுக்கவில்லை. அவர் ஆக்கிரமித்தார், எங்கள் மக்களை கொன்றார்.
2014 முதல் 2022 வரையிலும் கூட எங்கள் மக்கள் பலியாக்கப்பட்டனர். இதுதொடர்பாக ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அவரை யாரும் தடுக்கவில்லை. நிறைய பேசிவிட்டோம். அவருடன் ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டோம். பிரான்ஸ் அதிபர் மேக்ரான், ஜெர்மனி முன்னாள் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் முன்னிலையில் புடினுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதையும் மீறித்தான் அவர் 2022ல் எங்களுக்கு எதிராக போர் தொடுத்தார். மக்களை கொன்றார். போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கூறியபடி அவர்களை கைதிகளையும் பரிமாறிக் கொள்ளவில்லை. அனைத்தையும் மீறினார் புடின். அப்படியிருக்கையில் எதை ராஜதந்திரம் என்கிறீர்கள்?
ஜே.டி.வான்ஸ்: உங்கள் நாட்டின் அழிவை முடிவுக்கு கொண்டு வரப் போகும் ராஜதந்திரத்தைப் பற்றி பேசுகிறேன். மரியாதையுடன் கூறுகிறேன், நீங்கள் ஓவல் அலுவலகத்திற்கு வந்து அமெரிக்க மீடியாக்கள் முன்பாக எங்கள் மீதே குற்றம் சுமத்துவது அவமரியாதை என நினைக்கிறேன். நியாயமாக பார்த்தால் போரை முடிக்க முயற்சிக்கும் எங்கள் அதிபருக்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டும். நீங்கள் பிரச்னையில் இருக்கிறீர்கள்.
ஜெலன்ஸ்கி: போரின் ஆரம்பத்தில் இருந்தே பிரச்னையில் தான் இருக்கிறோம். அனைவருக்கும் பிரச்னைகள் உள்ளன. இப்போது உங்களிடம் நிறைய பலம் உள்ளது. நீங்கள் விபரீதத்தை உணரவில்லை. எதிர்காலத்தில் உணர்வீர்கள். கடவுள் ஆசீர்வதிப்பாராக.
டிரம்ப் (மிகுந்த ஆத்திரத்துடன்): உங்களுக்கு அது தெரியாது. நிச்சயம் தெரியாது. நாங்கள் என்ன உணரப் போகிறோம் என்று எங்களிடம் சொல்லாதீர்கள். நாங்கள் பிரச்னையை தீர்க்க முயற்சிக்கிறோம். நாங்கள் என்ன உணரப் போகிறோம் என்று எங்களிடம் சொல்லாதீர்கள்.
ஜெலன்ஸ்கி: நான் உங்களுக்குச் சொல்லவில்லை. கேட்ட கேள்விக்கு பதிலளிக்கிறேன்.
டிரம்ப்: எங்களுக்கு உத்தரவிடும் நிலையில் நீங்கள் இல்லை. நாங்கள் நன்றாகவும், வலுவாகவும் உணரப் போகிறோம். நீங்கள் தான் நல்ல நிலையில் இல்லை. மோசமான நிலையில் இருக்கிறீர்கள். உங்களிடம் எதுவும் இல்லை. லட்சக்கணக்கான மக்களின் உயிரோடு சூதாட்டம் விளையாடுகிறீர்கள். 3ம் உலகப் போருக்கான சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளீர்கள்.
ஜெலன்ஸ்கி: நீங்க என்ன பேசுறீங்க?
டிரம்ப்: உங்களுக்கு அளவுக்கு அதிகமாகவே ஆதரவு கொடுத்த எங்களுக்கு ரொம்ப அவமரியாதை பண்ணிட்டீங்க.
வான்ஸ்: எங்களுக்கு ஒருதடவையாவது நன்றி சொன்னீங்களா. கடந்த அக்டோபரில் பென்சில்வேனியா வந்தப்ப, எதிர்க்கட்சிக்காக பிரசாரம் பண்ணீங்க.
ஜெலன்ஸ்கி: நான் பலமுறை நன்றி கூறியிருக்கிறேன். போரை பற்றி சத்தம் போட்டு பேசிவிட்டால், உங்களால் எதுவும் முடியும் என நினைக்கிறீர்கள்.
டிரம்ப்: அவர் (வான்ஸ்) சத்தமாகப் பேசவில்லை. உங்கள் நாடு பெரிய சிக்கலில் உள்ளது.
ஜெலன்ஸ்கி: நான் பதிலளிக்கலாமா
டிரம்ப்: இல்லை, இல்லை. நீங்கள் நிறைய பேசிவிட்டீர்கள். உங்கள் நாடு பெரிய சிக்கலில் உள்ளது. நீங்கள் போரில் வெற்றி பெறவில்லை. உங்களிடம் எந்த பலமும் இல்லை. போர் வீரர்கள் இல்லை, ஆயுதங்கள் இல்லை.
ஜெலன்ஸ்கி: ஆனால் நாங்கள் எங்கள் சொந்த நாட்டில்தான் இருக்கிறோம். வலுவாக இருக்கிறோம். போரின் தொடக்கத்திலிருந்தே, நாங்கள் தனியாக இருக்கிறோம். நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
டிரம்ப்: நாங்கள் இல்லாவிட்டால் இந்த போர் 2 வாரத்தில் முடிந்திருக்கும்.
ஜெலன்ஸ்கி: 3 நாளில் முடிந்திருக்கும். இதையேதான் புடினும் சொல்லிக் கேட்டேன்.
ஜே.டி.வான்ஸ்: நீங்கள் தவறு செய்கிறீர்கள்.
டிரம்ப்: அமெரிக்க மக்கள் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பது நல்லது என்று நினைக்கிறேன். இது மிகவும் முக்கியமானது. நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். உங்களிடம் எதுவும் இல்லை. நீங்கள் அங்கே புதைக்கப்படுகிறீர்கள். மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். பிறகு ஏன் போர்நிறுத்தம் வேண்டாம் என்று சொல்கிறீர்கள். போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டால், தோட்டாக்கள் பறப்பது நின்றுவிடும், உங்கள் மக்கள் கொல்லப்படுவதை நிறுத்தலாம்.
ஜெலன்ஸ்கி: நிச்சயமாக நாங்கள் போரை நிறுத்த விரும்புகிறோம். ஆனால் அதற்கு முன்பாக உத்தரவாதங்களை கேட்கிறோம். இதற்கு முன் நடந்த ஒப்பந்தங்களின் உத்தரவாதங்கள் கேள்விக்குறியானதைப் பற்றி கேட்கிறோம்.
டிரம்ப்: அதுக்கும் எனக்கும் சம்மந்தமில்லை. அது பைடன் என்கிற புத்திச்சாலி இல்லாத நபரால் செய்யப்பட்டவை.
ஜெலன்ஸ்கி: அவரும் அமெரிக்க அதிபர் தானே.
டிரம்ப்: மன்னிக்கவும். ஒபாமா உங்களுக்கு வெறும் ஆவணங்களை தந்தார். நாங்கள் ஆயுதங்களை தந்திருக்கிறோம். பைடன் ரஷ்யாவை மதிக்கவில்லை. அதனால் முந்தைய ஒப்பந்தத்தை அவர்கள் உடைத்தார்கள். இப்போது நிலைமை வேறு. ஒபாமா, புஷ்ஷுடன் மேற்கொண்ட ஒப்பந்தங்கள் மீறப்பட்டிருக்கலாம். ஆனால் டிரம்பிடம் அது நடக்காது. புடின் என்னுடன் நிறைய விஷயங்களை பேசி உள்ளார். நீங்கள் ஒரு கடினமான நபராக இருக்க நாங்கள் அதிகாரம் அளித்துள்ளோம். ஆனால் அமெரிக்கா இல்லாமல் நீங்கள் கடினமான நபராக இருப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை. உங்கள் மக்கள் மிகவும் தைரியமானவர்கள். போர் நிறுத்தம் செய்யப்படாமல் நீங்கள் தொடர்ந்து போராடுவீர்கள். ஆனால் அது அழகாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இந்த ஒப்பந்தத்தை ஏற்காதது நல்ல விஷயம் அல்ல. நான் நேர்மையாகச் சொல்வேன். அது ஒரு நல்ல விஷயம் அல்ல. இவ்வாறாக உரையாடல் நிறைவுற்றது.
உக்ரைன் மக்கள் ஆதரவு
டிரம்புடனான சந்திப்பை தொடர்ந்து உக்ரைன் தலைநகர் கீவில் அதிபர் ஜெனல்ஸ்கிக்கு ஆதரவாக மக்கள் பேரணி நடத்தினர். ஜெலன்ஸ்கி தங்களின் நாட்டின் பாதுகாப்பாளர் என கோஷமிட்டு புகழ்ந்தனர். ரஷ்யாவுக்கு எதிராக ஜெலன்ஸ்கி சிங்கத்தை போல போரிடுகிறார் என பலரும் அவரை புகழ்ந்தனர். அதே சமயம், நவம்பர் மாதம் நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் 52 சதவீத உக்ரேன் மக்கள், போருக்கு விரைவான தீர்வை ஆதரிப்பதாகவும், அமைதிக்காக சில பகுதிகளை ரஷ்யாவுக்கு விட்டுக்கொடுப்பதை உக்ரைன் பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர்கள் நம்புவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் நிலைப்பாடு?
டிரம்ப்-ஜெலன்ஸ்கி உரையாடல் தொடர்பாக இந்தியா தரப்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. ரஷ்யா, அமெரிக்கா இரு நாடுகளும் இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடுகளாக உள்ளன. இதனால் உக்ரைன் போரை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என கூறும் இந்தியா, இதுவரை ரஷ்யாவுக்கு எந்த கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தலையில் கை வைத்துக் கொண்ட தூதர்
டிரம்ப் – ஜெலன்ஸ்கி இடையிலான சந்திப்பின் போது, அமெரிக்காவுக்கான உக்ரைன் தூதர் தனது தலையில் கைகளை வைத்துக் கொண்டு அந்த நிகழ்வுகளை நேரில் பார்த்துக் கொண்டிருந்தார். சில நிமிடங்களில் டிரம்ப் – ஜெலன்ஸ்கி இடையே நடந்த வாக்குவாதம், அங்கே சூழலை மாற்றியது. இதுபோன்ற எதையும் நாங்கள் இதற்கு முன்பு பார்த்ததே இல்லை என்று அமெரிக்காவைச் சேர்ந்த சக ஊடகத்தினர் தெரிவித்தனர். ஓவல் அலுவலகத்தை விட்டு வெளியேறிய நிருபர்கள், அதிர்ச்சியில் அசையாமல் நின்றிருந்தனர்.
ஐரோப்பிய நாடுகள் ஆதரவு
டிரம்ப் – ஜெலன்ஸ்கி மோதல் சூழலுக்கு மத்தியில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கூறுகையில், ‘‘3 ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைனுக்கு உதவவும், ரஷ்யாவிற்கு தடை விதிக்கவும் நாம் அனைவரும் சரியான முடிவை எடுத்தோம். அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். ஏனென்றால் அவர்கள் (உக்ரைன்) தங்கள் கண்ணியம், சுதந்திரம், குழந்தைகள் மற்றும் ஐரோப்பாவின் பாதுகாப்பிற்காக போராடுகிறார்கள்’’ என்று குறிப்பிட்டார். ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் வெளியிட்ட பதிவில், ‘‘உக்ரைன் நீங்கள் தனியாக இல்லை. உங்கள் கண்ணியம் உக்ரைன் மக்களின் துணிச்சலை மதிக்கிறோம். வலிமையாக இருங்கள், தைரியமாக இருங்கள், அச்சமின்றி இருங்கள். ஒரு நியாயமான மற்றும் நீடித்த அமைதிக்காக நாங்கள் உங்களுடன் தொடர்ந்து பணியாற்றுவோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார். இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியோ மெலோனி விடுத்துள்ள அழைப்பில், ‘‘இன்றைய பெரும் சவால்களை எவ்வாறு சமாளிக்க விரும்புகிறோம் என்பது குறித்து வெளிப்படையாகப் பேச, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் நட்பு நாடுகளுக்கு இடையே உடனடி உச்சிமாநாடு கூட வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகை அறிக்கை
வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ‘‘அதிபர் டிரம்ப், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இருவரும் அமெரிக்க மக்களின் நலன்களுக்காகவும், உலகில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை மதிக்கும் நபர்களுக்காகவும் எப்போதும் துணை நிற்பார்கள். யாரும் அமெரிக்க மக்களை ஒருபோதும் சாதகமாகப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டார்கள்’’ என கூறப்பட்டுள்ளது.
அடிக்காம விட்டது அதிசயம்: ரஷ்யா
ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மரியா ஜகரோவா வெளியிட்ட பதிவில், ‘‘ஜெலன்ஸ்கியின் அனைத்து பொய்களிலும் மிகப்பெரிய பொய், 2022ல் அவர்கள் தனியாக ஆதரவின்றி இருந்ததாக கூறியதுதான். டிரம்ப்பும், ஜேடி. வான்ஸும் அந்த பொய்யரை அடிக்காமல் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொண்டது அதிசயம் தான்’’ என கிண்டலடித்துள்ளார். ரஷ்ய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வெடேவ் கூறுகையில், ‘‘உக்ரைன் 3ம் உலகப் போருக்காக சூதாடுகிறது என ஜெலன்ஸ்கி முகத்திற்கு நேராக டிரம்ப் உண்மையை போட்டு உடைத்தது நல்ல விஷயம். ஆனால் இதுமட்டும் போதாது. அந்த நாஜி இயந்திரத்திற்கு ராணுவ உதவியையும் நிறுத்த வேண்டும்’’ என்றார்.
நன்றி அமெரிக்கா
வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய சில நிமிடங்களுக்குப் பிறகு, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பதிவில், ‘‘அமெரிக்காவிற்கு நன்றி, உங்கள் ஆதரவிற்கு நன்றி, இந்த வருகைக்கு நன்றி. உக்ரைனுக்கு நியாயமான மற்றும் நீடித்த அமைதி தேவை, அதற்காக நாங்கள் சரியாக பாடுபடுகிறோம்’’ என்றார்.
நேரம் பார்த்து காலைவாரிய துணை அதிபர்
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஆரம்பத்தில் இருந்தே உக்ரைனுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவராக இருந்துள்ளார். 2022ல் ஒஹியோ மாகாணத்தில் அமெரிக்க செனட்டிற்கான வேட்பாளராக இருந்த போது உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்வதை கடுமையாக விமர்சித்தார். இப்போது நேரம் கிடைத்ததும் உக்ரைனை வெளுத்து வாங்கி விட்டார். ஜெலன்ஸ்கியுடனான உரையாடலை வாக்குவாதமாக மாற முக்கிய காரணமே ஜேடி. வான்ஸ் பேச்சுக்கள் தான்.
The post ரஷ்யாவுடனான போரை நிறுத்த சம்மதிக்காததால் டிரம்ப் – ஜெலன்ஸ்கி கடும் மோதல்: பேச்சுவார்த்தை பாதியில் நிறுத்தம் appeared first on Dinakaran.