பெங்களூரு: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. நடப்பு சீசனில் தனது சொந்த மைதானத்தில் முதல் ஆட்டத்திலேயே பெங்களூரு அணி தோல்வியை எதிர்கொண்டுள்ளது. முதலில் பேட் செய்த அந்த அணி 6.2 ஓவர்களிலேயே 4 விக்கெட்களை தாரை வார்த்தது. டாப் ஆர்டர் பேட்டிங்கை குஜராத் அணியின் முகமது சிராஜ் (4 ஓவர்கள், 19 ரன்கள், 3 விக்கெட்கள்) கடும் சிதைவுக்கு உட்படுத்தியிருந்தார்.
நடுவரிசை மற்றும் பின்வரிசையில் லியாம் லிவிங்ஸ்டன் (54), ஜிதேஷ் சர்மா (33), டிம் டேவிட் (32) ஆகியோர் பொறுப்புடன் விளையாடியதன் காரணமாகவே பெங்களூரு அணியால் 169 ரன்களை சேர்க்க முடிந்திருந்தது. பெங்களூரு அணிக்கு இது நடப்பு சீசனில் முதல் தோல்வியாக அமைந்திருந்தது. அந்த அணி 3 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகளை பெற்றுள்ளது.