புதுடெல்லி: ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை இருப்பவர்களுக்கு இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ரூ.12 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுபவர்களுக்கு ரூ.4 லட்சத்தில் இருந்து வரி கணக்கிடப்படும்.
2025-26-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், முக்கிய அறிவிப்புகளில் ஒன்றாக ரூ.12 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாக அறிவித்தார். "புதிய முறையின் கீழ் ரூ.12 லட்சம் வருமானம் வரை (அதாவது மூலதன ஆதாயங்கள் போன்ற சிறப்பு வருமானத்தைத் தவிர மாதத்துக்கு ரூ.1 லட்சம் சராசரி வருமானம் வரை) வருமான வரி செலுத்த தேவையில்லை என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இதன் காரணமாக நடுத்தர வர்க்கத்தினர் வரி செலுத்துவது கணிசமாகக் குறையும். அவர்களின் கைகளில் அதிக பணத்தை இது விட்டுச்செல்லும். இது வீட்டுச் செலவு, சேமிப்பு மற்றும் முதலீட்டை அதிகரிக்கும்" என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.