வாஷிங்டன்: இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க யுஎஸ் எய்டு அமைப்பு ரூ.181 கோடி நிதி வழங்கியதற்கு எந்த ஆதாரமும் இல்லை என அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் அரசின் செலவுகளை குறைக்க நியமிக்கப்பட்ட தொழிலதிபர் எலான் மஸ்க் தலைமையிலான அரசின் செயல்திறன் குழு சமீபத்தில் இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்கா வழங்கி வரும் ரூ.181 கோடி நிதியை நிறுத்துவதாக அறிவிப்பு வெளியிட்டது. இது இந்திய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிதி மூலம் முன்னாள் அதிபர் பைடன் இந்தியாவில் யாருடைய ஆட்சி அமைய வேண்டுமென திட்டமிட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக டிரம்ப் மேலும் கொளுத்திப் போட்டார். இந்த நிதியை அமெரிக்க தொழிலதிபர் சோரஸ் மூலமாக காங்கிரஸ் தவறாக பயன்படுத்தியதாக பாஜ தலைவர்கள் குற்றம்சாட்டினார். வெளிநாட்டு நிதி பெற்று நாட்டிற்கு துரோகம் செய்த துரோகி என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்தனர்.
இதுபோன்ற தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பேட்டி அளித்தார். இவ்வாறு, இந்த விவகாரத்தில் காங்கிரசுக்கு எதிராக பாஜ தலைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், யுஎஸ் எய்டு அமைப்பு மூலம் இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க ரூ.181 கோடி நிதி கொடுத்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என கூறி உள்ளது.
இது தொடர்பாக யுஎஸ் எய்டு அமைப்பில் பணியாற்றிய 3 அதிகாரிகளிடம் பேட்டி எடுத்துள்ளது. அதில் ஒருவர், ‘‘எலான் மஸ்க் கூறியது போல் இந்தியாவுக்கு ரூ.181 கோடி நிதி வழங்கப்பட்டதாக தெரியவில்லை. பல நாடுகளில் தேர்தல் மற்றும் அரசியல் மேம்பாட்டிற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் வங்கதேசத்திற்கு ரூ.181 கோடி நிதி தரப்பட்டுள்ளது. எனவே இது தவறுதலாக இந்தியா என அரசின் செயல்திறன் குழு குறிப்பிட்டிருக்கலாம்’’ என்றார்.
மற்றொரு அதிகாரி கூறுகையில், ‘‘இந்தியாவில் தேர்தலுக்காக அமெரிக்கா ஒருபோதும் நிதி ஒதுக்கியது கிடையாது. அப்படி நாங்கள் கேள்விப்பட்டதும் இல்லை. இந்த தகவலில் உண்மை இருக்காது’’ என்றார். ‘‘எலான் மஸ்க் தலைமையிலான குழுவின் அறிக்கையை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தோம்’’ என 3வது அதிகாரி கூறி உள்ளார்.
இதே போல, இந்த நிதி இந்தியாவில் யார் பெற்றது, எந்த அமைப்பு பெற்றது, இந்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் தொடர்பிருக்கிறதா என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. இதன் மூலம் ஆதாரமில்லாத ஒரு விஷயத்தை வைத்து அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகமும், இந்தியாவில் மோடி அரசும் கட்டுக்கதைகளைக் கூறி அரசியல் செய்வதாக குற்றம்சாட்டப்படுகிறது.
* நண்பர் மோடிக்கு தந்தேன்
இந்தியாவுக்கு ரூ.181 கோடி நிதி விவகாரம் குறித்து அதிபர் டிரம்ப் 3வது முறையாக நேற்று முன்தினமும் பேசி உள்ளார். அதில் அவர், ‘‘இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க ரூ.181 கோடி நிதி நண்பர் மோடிக்கு அனுப்பப்பட்டுள்ளது’’ என்றார். எனவே இந்த நிதி குறித்து மோடி அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென காங்கிரஸ் ஊடக மற்றுமு் விளம்பர பிரிவு தலைவர் பவன் கேரா வலியுறுத்தி உள்ளார்.
* வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும்-டிரம்ப்
வெள்ளை மாளிகையில் மாகாண ஆளுநர்கள் கூட்டத்தில் பேசிய அதிபர் டிரம்ப், தேர்தல்கள் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும், வாக்களித்த அதே நாளில் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட வேண்டும் என வலியுறுத்தினார். வாக்கு இயந்திரங்கள் செலவு மிகுந்தவை என்றும் குறிப்பிட்டார். இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தனது எக்ஸ் பதிவில், ‘‘தனது நெருங்கிய நண்பர் அதிபர் டிரம்ப் கூறியதை பிரதமர் மோடி கவனத்தில் கொள்வாரா? நமது தேர்தல் செயல்முறையின் நேர்மை குறித்த ஒட்டுமொத்த தேசத்தின் கவலையை எண்ணிப் பார்ப்பாரா?’’ என கேள்வி எழுப்பி உள்ளார்.
The post ரூ.181 கோடி தந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை யுஎஸ் எய்டு மூலம் ஒரு பைசா கூட இந்தியாவுக்கு வழங்கப்படவில்லை: அமெரிக்க பத்திரிகை பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.