வாஷிங்டன்: ₹182 கோடி நிதியுதவி ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், இன்று டிரம்ப் அளித்த பேட்டியில் ‘இந்தியாவிடம் நிறைய பணம் உள்ளது’ என்று அதிரடி கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதை அடுத்து, தொழிலதிபர் எலான் மஸ்க் தலைமையில் ‘அரசு செயல் திறன்’ (டிஓடிஜி) என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது. இந்த துறை அமெரிக்க அரசின் செலவினங்களை குறைத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பல்வேறு நாடுகளுக்கு வழங்கப்பட்ட நிதியுதவி ரத்து செய்யப்படுவதாக டிஓடிஜி அறிவித்தது. இதன்படி இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்க அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட ரூ.182 கோடி ($21 மில்லியன்) நிதியுதவி ரத்து செய்யப்பட்டுள்ளதாக டிஓடிஜி தெரிவித்திருந்தது.
எனினும், இந்த தொகை இந்தியாவில் எந்த அமைப்புக்கு வழங்கப்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை. இவ்விவகாரம் குறித்து பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா, ‘காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது தேச நலனுக்கு எதிரான சக்திகள் ஒன்றிய அரசின் அமைப்புகளில் ஊடுருவின. இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க 21 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டிருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இந்த நிதியை பாஜக பெறவில்லை. அப்படியென்றால் அமெரிக்காவின் நிதியுதவியை பெற்றது யார்?’ என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு அப்போதைய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த குரேஷி மறுப்பு தெரிவித்து வெளியிட்ட பதிவில், ‘நான் தலைமை தேர்தல் ஆணையராக இருந்தபோது, இந்திய தேர்தல் ஆணையம், இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து சில மில்லியன் டாலர் நிதியுதவியை பெறுவதற்கு ஏற்ப ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்தியில் உண்மை இல்லை’ என்றார். இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், ‘உலகின் மிக அதிகமாக வரிவிதிப்பு நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. அவர்களிடம் நிறைய பணம் உள்ளது. அப்படியிருக்கையில், இந்தியாவுக்கு ஏன் நாங்கள் 21 மில்லியன் டாலர்களை வழங்க வேண்டும். இருப்பினும், இந்திய பிரதமர் மோடியிடம் எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது’ என்று கூறினார்.
The post ரூ. 182 கோடி நிதியுதவி ரத்தான விவகாரம்; இந்தியாவிடம் நிறைய பணம் உள்ளது: நாங்கள் ஏன் தரவேண்டும் என டிரம்ப் கருத்து appeared first on Dinakaran.