சென்னை: ரூ.22.36 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 12 புதிய சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (6.3.2025) தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் திருவள்ளூர் பதிவு மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட 2 எண் இணை சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் பதிவுத்துறையில் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் 22 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 12 புதிய சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
பதிவுத்துறை வாயிலாக மக்கள் தங்கள் சொத்துக்களின் மீதான உரிமையை தமது பெயரில் பதிவு செய்தல், திருமணத்தைப் பதிவு செய்தல், சங்கங்கள், சீட்டுகள் மற்றும் கூட்டாண்மை நிறுவனம் போன்ற குழுவாகக் கூடி செயல்படும் நடவடிக்கைகளைப் பதிவு செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பதிவுத்துறை செயல்பாடுகளை மேலும் மேம்படுத்தும் வகையில் புதிய சார்பதிவாளர் அலுவலகங்களை கட்டுதல், காலிப்பணியிடங்களை நிரப்புதல், புதிய சார்பதிவாளர் அலுவலகங்களை ஏற்படுத்துதல், துறையின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
திருவள்ளூர் பதிவு மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட 2 எண் இணை சார்பதிவாளர் அலுவலகம்
2024-2025 ஆம் ஆண்டிற்கான வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவு மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி, திருவள்ளூர் வருவாய் மாவட்டம், திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை வட்டங்களில் அமையும் திருவள்ளூர் பதிவு மாவட்டம் 1 எண் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள 82 கிராமங்களில் 36 கிராமங்களைப் பிரித்து, பிரிக்கப்பட்ட அந்த 36 கிராமங்களை உள்ளடக்கி திருவள்ளூர் பதிவு மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட 2 எண் இணை சார்பதிவாளர் அலுவலகம் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.
புதியதாக உருவாக்கப்பட்ட திருவள்ளூர் 2 எண் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் சராசரியாக ஆண்டொன்றிற்கு 10,000-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் பதிவாகி ஏறத்தாழ 53 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்புதிய சார்பதிவாளர் அலுவலகம் திறக்கப்படுவதன் மூலம் அப்பகுதியைச் சார்ந்த பொதுமக்களுக்கு விரைவான மற்றும் சிறப்பான சேவைகளை அளிக்க இயலும்.
மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள 12 புதிய சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள்
2021-22 மற்றும் 2022-23 ஆகிய ஆண்டுகளுக்கான வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவு மானியக் கோரிக்கையில், அதிக அளவில் வருவாய் ஈட்டித் தரும் பதிவுத்துறையில் மிகவும் பழுதடைந்த கட்டடங்களில் இயங்கிவரும் சார்பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் வாடகை கட்டடங்களில் இயங்கிவரும் சார்பதிவாளர் அலுவலகங்கள், பொதுமக்களின் நலன் கருதி மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய சொந்த அரசு கட்டடங்கள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை, பதிவுத்துறையில் 60 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவில் 31 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக, தற்போது தஞ்சாவூர் மாவட்டம் – ஒரத்தநாடு, திருவாரூர் மாவட்டம் – திருத்துறைப்பூண்டி மற்றும் வலங்கைமான், மதுரை மாவட்டம் – திருமங்கலம், காஞ்சிபுரம் மாவட்டம் – ஸ்ரீபெரும்புதூர், திருப்பூர் மாவட்டம் – தாராபுரம், தூத்துக்குடி மாவட்டம் – எட்டையாபுரம், சாத்தான்குளம் மற்றும் ஸ்ரீவைகுண்டம், விருதுநகர் மாவட்டம் – இராஜபாளையம், புதுக்கோட்டை மாவட்டம் – விராலிமலை, கரூர் மாவட்டம் – குளித்தலை ஆகிய இடங்களில் 22.36 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 12 புதிய சார்பதிவாளர் அலுவலகங்கள் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., வணிகவரி மற்றும் பதிவுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த், இ.ஆ.ப., பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post ரூ.22.36 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 12 புதிய சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.