அவசரகால ஊர்திகளின் சேவைகளை மேம்படுத்தும் விதமாக ரூ.30.29 கோடி மதிப்பில் 147 அவசரகால ஊர்திகளின் சேவைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘108’ அவசரகால ஊர்தி சேவை கடந்த 2008-ம் ஆண்டு செப்.15-ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழக அரசு EMRI GHS என்ற தனியார் நிறுவனம் மூலம் ‘108’ அவசரகால சேவையை வழங்கி வருகிறது. பொதுமக்கள் அவசரகால மருத்துவ தேவைக்கு 108 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு 24×7 மணிநேரமும் இலவசமாக பயன்பெற்று வருகின்றனர்.