* போலீசில் புகார்கள் குவிகிறது
*ஏஜென்டுகளை பிடித்து விசாரணை
சேலம்: சேலம் அம்மாபேட்டையில் உள்ள சிவகாமி திருமண மண்டபத்தில், புனித அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளையின் வேலூரை சேர்ந்த விஜயபானு நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையில் பணம் இரட்டிப்பு தருவதாக கூறி, ஆயிரக்கணக்கான மக்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை வசூலித்துள்ளனர். இதனை அறிந்த சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், அதிரடியாக திருமண மண்டபத்தில் சோதனையிட்டனர். அதில், அங்கீகாரம் இல்லாத திட்டத்தின் கீழ் முறைகேடாக முதலீடு பெறப்பட்ட ரூ12.65 கோடி பணம், 2.5 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட அறக்கட்டளை நிர்வாகிகள் விஜயபானு, ஜெயபிரதா, பாஸ்கர் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களை கோவை டான்பின் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
நீதிபதி உத்தரவின்படி பெண் நிர்வாகி விஜயபானு, ஜெயபிரதா ஆகியோரை கோவை பெண்கள் கிளை சிறையிலும், பாஸ்கரை கோவை மத்திய சிறையிலும் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ₹12.65 கோடி பணம், 2.5 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி ஆகியவை மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த மோசடியில் அறக்கட்டளை நிர்வாகிகளாக செயல்பட்டு வந்த மேலும் 10 பேரை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று பிடித்து விசாரித்து வருகின்றனர். விசாரணை முடிவில், 10 பேரையும் கைது செய்யவுள்ளனர். கைதான பெண் நிர்வாகி விஜயபானுவிற்கு ஆதரவாக செயல்பட்ட 20க்கும் மேற்பட்ட ஏஜென்டுகள் குறித்தும் விசாரணை நடக்கிறது. இதனிடையே நேற்று மாலை வரை 60 பேர், ₹1.50 கோடி வரை ஏமாந்திருப்பதாக புகார் கொடுத்துள்ளனர்.
விஜயாபானு, ஜெயபிரபா, பாஸ்கர் ஆகியோர் பெயரில் உள்ள வங்கி கணக்குகள், சொத்துகள் குறித்து டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர். இதில், விஜயாபானுவின் வீட்டில் சோதனையிட்டபோது, வங்கி கணக்குகள் மற்றும் சில ஆவணங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதனை ஆய்வு செய்து, முறைகேடாக பெறப்பட்ட முதலீடு மூலம் சொத்துகள் குவித்து வைக்கப்பட்டுள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர்.
The post ரூ12.65 கோடி, 2.5 கிலோ தங்கம் கருவூலத்தில் ஒப்படைப்பு: பணம் இரட்டிப்பு மோசடியில் மேலும் 10 நிர்வாகிகள் சிக்கினர் appeared first on Dinakaran.