ரெட்டியார்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம், புதுசத்திரம், செம்மடைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவ குணமிக்க தேங்காய்ப்பூ அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. இப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள் ஏராளமானோர் தேங்காய்ப்பூ விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வழியாக கோயம்புத்தூர், திருப்பூர், ஊட்டி, மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு கார்கள் மற்றும் வேன்களில் செல்லும் பொதுமக்கள் இவற்றை விரும்பி வாங்கி செல்கின்றனர். இவை ரூ.150 முதல் விற்பனை செய்யப்படுகிறது
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘பொதுவாக வீடுகளில் உடைக்கும் தேங்காயில் பூ இருந்தால், பணவரவு, லாபம், எதிர்பாராத நல்ல விசயங்கள் போன்றவை நடைபெறும் என கூறப்படுகிறது. நன்கு முற்றிய தேங்காயை மண்ணில் புதைத்து, 3 அல்லது 4 மாதங்கள் கழித்து முளைவிட்டதும், அதன் உட்பகுதியில் பூ விளையும். இதனை சாப்பிடுவதால் ஜீரண சக்தி குறைபாடு சரியாகும். இதிலுள்ள மினரல், வைட்டமின் குடலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. மலச்சிக்கலை குணமாக்குகிறது. முகத்தில் சுருக்கங்கள், வயதான தோற்றம் மற்றும் முதுமையை தள்ளி போடும். சரும நோய் நெருங்காது. இன்சுலின் சுரப்பை தூண்டுவதால், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம். அல்சர், வயிற்றுப்புண் உள்ளிட்ட குடல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் சிறந்தது’’ என்றனர்.
The post ரெட்டியார்சத்திரம் பகுதியில் மருத்துவ குணமிக்க தேங்காய்ப்பூ விற்பனை அமோகம் appeared first on Dinakaran.