தமிழ், இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வரும் பூஜா ஹெக்டே, தமிழில் விஜய் ஜோடியாக அவரது 69-வது படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவுடன் அவர் நடித்துள்ள ‘ரெட்ரோ’ படம் மே 1-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், தனது பெருமைக்குரிய படமாக ‘ரெட்ரோ’ இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “நான் நடித்துள்ள அனைத்துப் படங்களும் எனக்குப் பெருமையானவைதான். ஆனால், ‘ரெட்ரோ’ நான் அதிகமாகப் பெருமை கொள்ளும் படம். அந்தப் படத்தின் ஒவ்வொரு விஷயத்தையும் நான் விரும்புகிறேன். படமாக்கிய விதம் படப்பிடிப்பில் ஏற்பட்ட அனுபவம் சிறப்பாக அமைந்தது. என் கதாபாத்திரம் அதில் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முழுப் படத்தையும் பார்க்காமலேயே இதை நான் சொல்கிறேன். இப்போது எடிட்டிங் பணி போய்க் கொண்டிருக்கிறது” என்றார்.