சென்னை: “ரேஷன் கடைகளில் புகார் பதிவேடு வைக்கப்பட்டுள்ளது. புகார் இருந்தால் 1967 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். ரேஷன் கடைகளில் கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பது, சேவை குறைபாடு, தரம் குறைவு என்பன உள்பட மொத்தம் 97,535 புகார்கள் வந்துள்ளன. அவற்றை உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி பேரவையில் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 21) கேள்வி நேரத்தின்போது, பேராவூரணி எம்.எல்.ஏ., என்.அசோக்குமார் பேசும்போது, “சேதுபாவாசமுத்திரம் ஒன்றியம், கொளக்குடி ஊராட்சியில் உள்ள முழுநேர நியாய விலைக் கடைக்கு கட்டிடம் கட்டப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் பதில் அளிக்கையில், “தமிழகத்தில் மொத்தம் 34,908 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் 6,611 வாடகை கட்டிடத்தில் இயங்குகின்றன. 2,545 கடைகளுக்கு சொந்தக் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. மீதமுள்ள கடைகளுக்கும் விரைவில் சொந்தக் கட்டிடம் கட்டப்படும். 2,500 கடைகளைப் புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.