மதுரை: பாஜ தலைவர் அண்ணாமலையின் வெற்று வாக்குறுதியை நம்ப முடியாது என்று டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுரை மாவட்டம் அ.வல்லாளபட்டியில் கடந்த 10ம் தேதி மாலை 6 மணியளவில் பொதுமக்களை சந்தித்த பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படாது. மக்கள் போராட்டத்தை கைவிட்டு பொங்கல் கொண்டாடச் செல்லுங்கள் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார். எனினும், ஒன்றிய அரசின் சுரங்கத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் கிஷன் ரெட்டி முறைப்படி அறிவிப்பு செய்து, அதை அரசிதழில் வெளியிடும் வரை இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டதாகக் கருத முடியாது. அ.வல்லாளபட்டி கூட்டத்தில் பாஜ கட்சியை தவிர்த்து கலந்துகொண்ட பொதுமக்கள், ‘‘அண்ணாமலை லண்டனில் இருந்து வந்தவுடன் டங்ஸ்டன் திட்டத்தை நல்ல திட்டம் என்று வரவேற்று பேசினார். அரிட்டாபட்டி உள்ளிட்ட சில கிராமங்கள் பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று குறிப்பிட்டார் என்பதை சுட்டிக்காட்டி, ஒன்றிய அமைச்சகம் மூலம் முறையான அறிவிப்பு வந்தால் மட்டுமே ஏற்போம். வெற்று வாக்குறுதிகளை நம்பமாட்டோம்’’ என்று உறுதிபடக் கூறியுள்ளனர்.
அ.வல்லாளபட்டி மக்களின் உறுதியான கருத்தை டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு முழுமையாக ஏற்று வழிமொழிகிறது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடியதற்காக 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதையும், டெல்லியில் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் 700க்கும் மேற்பட்ட உயிர்களை பலிகொடுத்து போராடி வந்ததையும் ஆண்டுக்கணக்கில் கண்டுகொள்ளாமல் இருந்த பாஜவின் அரசியலும், வேதாந்தா நிறுவனத்தின் கடந்த கால செயல்பாடுகளும் எளிதாகக் கடந்துவிடக் கூடிய ஒன்றல்ல என்பதை தமிழ்நாடு மக்களும், டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பும் அறிந்தே வைத்துள்ளோம். எனவே அண்ணாமலை வெறுமனே வாய்வார்த்தையில் மக்கள் போராட்டத்தை திசைதிருப்பாமல், மத்தியில் ஆட்சியில் உள்ள தனது கட்சி பிரதமரான நரேந்திர மோடியை வலியுறுத்தி சட்ட அங்கீகாரம் தரும் எழுத்துப்பூர்வமான டங்ஸ்டன் திட்ட ரத்து அறிவிப்பு வெளிவர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாநில அரசும், மேலூர் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மற்றும் தொல்லியல் மண்டலமாக அறிவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post லண்டனில் இருந்து வந்ததும் திட்டத்தை வரவேற்றுப் பேசிய அண்ணாமலையின் வெற்று வாக்குறுதியை நம்பமுடியாது: டங்ஸ்டன் எதிர்ப்பு கூட்டமைப்பு அறிக்கை appeared first on Dinakaran.