லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம் – லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிகளில் பரவும் காட்டுத் தீயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. ஈட்டன் பகுதியில் 11 பேரும், பாலிசேட்ஸ் பகுதியில் 5 பேரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பலத்த காற்று காரணமாக தீயை அணைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
காற்றின் வேகம் அதிகமானதால் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடினர். பள்ளத்தாக்கில் வீரர்கள் தீயை அணைக்கப் போராடிக்கொண்டிருந்தபோது விமானம் மூலம் வானில் இருந்து இளஞ்சிவப்பு தீ தடுப்பு மருந்து வீசிப்பட்டது. இதனிடையே, லாஸ் ஏஞ்சல்ஸ் முழுவதும் உள்ள தீயணைப்பு குழுவினர், அல்டடேனா மற்றும் பசடேனா அருகே 22,660 ஏக்கர் பாலிசேட்ஸ் பகுதி தீயில் 11 சதவீதத்தையும், 14,000 ஏக்கர் ஈட்டன் பகுதி தீயில் 15 சதவீதத்தையும் கட்டுப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.