சென்னை: சிஎஸ்கே அணியின் உருவாக்கம், சவால்கள், சாதனைகள் மற்றும் சோதனைகளை கடந்து மீண்டு வந்த நிகழ்வுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ‘லியோ-தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் சிஎஸ்கே’ என்ற புத்தகத்தை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான பி.எஸ்.ராமன் எழுதியுள்ளார். இந்த புத்தகத்துக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான மேத்யூ ஹைடன் முன்னுரை எழுதியுள்ளார்.
இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. புத்தகத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சி.டி.கோபிநாத் வெளியிட முதல் பிரதியை இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது.