புதுடெல்லி: வக்பு (திருத்த) சட்டத்துக்கு எதிரான மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்து மத அறக்கட்டளையில் முஸ்லிம்கள் உறுப்பினராக அனுமதிப்பீர்களா என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது.
வக்பு (திருத்த) சட்டம் (ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு) கடந்த 8-ம் தேதி அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, ஏஐஎம்ஐஎம், சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் மொத்தம் 73 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில், இந்த சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிராக உள்ளது என்றும் இதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.