புதுடெல்லி: மாநிலங்களவையில் வக்பு சட்ட திருத்த மசோதா மீது நடைபெற்ற விவாதத்தின் போது, குர்ஆன் வசனங்களை மேற்கோள் காட்டி பாஜக எம்.பி. ராதா மோகன் தாஸ் பேசினார்.
மாநிலங்களவையில் வக்பு சட்ட திருத்த மசோதா நேற்றுமுன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீது எம்.பி.க்கள் காரசாரமாக விவாதம் நடத்தினர். பாஜக எம்.பி. ராதா மோகன் தாஸ் அகர்வால் பேசும் போது வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவாக, இஸ்லாமியர்களின் புனித நூல் குர்ஆனில் இருந்து 4 வசனங்களை மேற்கோள் காட்டி பேச முன்வந்தார். இது அவையில் இருந்த அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ராதா மோகன் தாஸ் பேசியதாவது:
நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் நான் உறுப்பினராக இருக்கிறேன். அவர்களும் (எதிர்க்கட்சியினர்) உறுப்பினர்களாக உள்ளனர். ஏதாவது முக்கிய விஷயம் குறித்து ஆலோசனை நடத்தும் போது, மதம் தொடர்பான அறிஞர்களை வரவழைத்தால் அவர்களிடம் நான் குர்ஆனில் இருந்து மேற்கோள் காட்டி பேசியிருக்கிறேன். இதற்கு அவர்கள்தான் (எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள்) சாட்சி.