சென்னை: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது இன்று (நவ.24) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக நாளை முதல் வரும் 29-ம் தேதி வரை கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, பூமத்திய ரேகையையொட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதி மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.