சென்னை: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இன்று (டிச.7) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது, வரும் டிச.11-ம் தேதி இலங்கை – தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பூமத்திய ரேகையை ஒட்டியிருக்கக்கூடிய இந்தியப் பெருங்கடல் அதனை ஒட்டியிருக்கக் கூடிய வங்கக் கடலில் வளிமண்டல சுழற்சி இருந்தது. அது இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்று அதே பகுதியில் நிலவி வருகிறது. இது, தொடர்ந்து மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது, மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுமா என்பது குறித்து தற்போது எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த காற்றத்தழுத்த தாழ்வு பகுதி, டிச.11-ம் தேதி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக – இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.