புதுடெல்லி: சிறுபான்மையினரை பாதுகாக்க வங்கதேச இடைக்கால அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத் துறை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மேலும், அதானி விவகாரம் குறித்தும் வெளியுறவு அமைச்சம விளக்கம் அளித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஷ்வால், "வங்கதேசத்தில் அதிகரித்து வரும் தீவிரவாத பேச்சுக்கள் கவலை அளிப்பதாக உள்ளன. இந்துக்களுக்கும் பிற சிறுபான்மையினருக்கும் எதிரான அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள் குறித்து வங்கதேச அரசிடம் இந்தியா தொடர்ந்தும் வலுவாகவும் எழுப்பியுள்ளது. அனைத்து சிறுபான்மையினரையும் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று அந்நாட்டின் இடைக்கால அரசாங்கத்தை இந்தியா கேட்டுக்கொள்கிறது. அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்களும், ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளும் கவலையை ஏற்படுத்துகின்றன. சிறுபான்மையினரை பாதுகாக்க வங்கதேச அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.