டாக்கா: வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் நேற்று உற்சாகத்துடன் சரஸ்வதி பூஜையை கொண்டாடி மகிழ்ந்தனர். வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி மாணவர்கள் போராட்டம் எதிரொலியாக பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதனை தொடர்ந்து இடைக்கால தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றார். இதனையடுத்து அங்கு இந்துக்கள் மற்றும் இதர சிறுபான்மையினருக்கு எதிரான சம்பவங்கள் அதிகரித்தன. கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதற்கு ஒன்றிய அரசு கவலை தெரிவித்தது. இடைக்கால அரசு சிறுபான்மையினர் மீதான தாக்குதல் துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாப்பதற்கு தவறிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இடைக்கால தலைவர் முகமது யூனுஸ் இந்து மக்களுக்கு சரஸ்வதி பூஜை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று முன்தினம் யூனுஸ் கூறுகையில், ‘‘வங்கதேசம் நல்லிணக்கத்தின் தாயகம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அனைத்து மதங்களை சேர்ந்த மக்களும் இந்த நாட்டில் சாதி, நிறம் மற்றும் மதம் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நாடு நாம் அனைவருக்கும் சொந்தமானது. மதம் அல்லது சாதியை பொருட்படுத்தாமல் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான இடமாகும்” என்று தெரிவித்துள்ளார்.
The post வங்கதேசத்தில் சரஸ்வதி பூஜை: இந்து மக்களுக்கு இடைக்கால தலைவர் யூனுஸ் வாழ்த்து appeared first on Dinakaran.