டாக்கா: வங்கதேசத்தில் நேற்று இந்துகோயில் தீ வைத்து எரிக்கப்பட்டது. கோயிலில் உள்ள சிலை சேதப்படுத்தப்பட்டது. வங்கதேசத்தில் பிரதமர் ஷேக்ஹசினா ஆட்சி கவிழ்ந்த பிறகு இடைக்கால அரசில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது. அங்குள்ள இந்துமதத்தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் கடந்த நவ.25ல் தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து இந்துக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இதற்கு எதிராக நடந்த போராட்டத்தில் உதவி அரசு வழக்கறிஞர் சைபுல் இஸ்லாம் அலிப் கொல்லப்பட்டார். இதனால் வன்முறை அதிகரித்துள்ளது. இதை கண்டித்து இந்தியாவிலும் போராட்டம் அதிகரித்துஉள்ளது. அகர்தலாவில் உள்ள வங்கதேச துணை தூதரகம் தாக்கப்பட்டது. இந்த சூழலில் வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்டது. நாளை ஒன்றிய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்த வங்கதேசம் செல்ல உள்ள நிலையில் நேற்று அதிகாலை டாக்காவில் உள்ள இஸ்கான் கோயிலுக்கு சிலர் தீ வைத்தனர். துராக் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்தது.
இந்த தீவிபத்தில் ஒரு சிலை சேதமடைந்தது. மேலும் திரைச்சீலைகள் எரிக்கப்பட்டது. இதுபற்றி இஸ்கான் அமைப்பின் கொல்கத்தா துணைத் தலைவர் ராதாராம் தாஸ் கூறுகையில், ‘நாசகாரர்கள் டாக்காவில் உள்ள நம்ஹட்டா மையத்தில் உள்ள ராதா கிருஷ்ணா கோயில் மற்றும் மகாபாக்ய லக்ஷ்மி நாராயண் கோயிலுக்கு தீ வைத்தனர். லக்ஷ்மி நாராயணரின் சிலைகள் மற்றும் கோவிலுக்குள் இருந்த அனைத்து பொருட்களும் முற்றிலும் எரிந்து நாசமானது. கோயிலின் பின்புறத்தில் உள்ள தகரக் கூரையைத் தூக்கி பெட்ரோலை ஊற்றி தீவைத்துள்ளனர்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் பதற்றம் அதிகரித்து உள்ளது.
The post வங்கதேசத்தில் தொடர் வன்முறை இந்து கோயில் தீ வைத்து எரிப்பு: சிலைகள் சேதம் appeared first on Dinakaran.