சென்னை: வடசென்னை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தபால் நிலைய பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகம் பெரியார் நகரில் விரைவில் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தபால் நிலைய பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகத்தை ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் தபால்துறை ஆகியவை இணைந்து செயல்படுத்தி வருகின்றன. இதற்காக, தலைமை தபால் நிலையம் அல்லது தபால் அலுவலகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன்மூலம் இந்திய குடிமக்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் வேலூர், விழுப்புரம் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை கேந்திரா அலுவலகம் இயங்கி வருகிறது. இந்நிலையில், வடசென்னையில் உள்ள மக்கள் பாஸ்போர்ட் எடுக்க வேண்டும் என்றால் சாலிகிராமம், அமைந்தகரை, தாம்பரம் ெசல்ல வேண்டியுள்ளது.
எனவே அருகிலேயே தபால் நிலைய பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகம் வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து வடசென்னை பகுதியான பெரியார் நகரில் தபால் நிலைய பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகம் அமைக்க ஒன்றிய அனுமதி வழங்கியுள்ளது. பெரியார் நகரில் திறக்கப்பட உள்ள இந்த பாஸ்போர்ட் மையம் 9வது தபால் நிலைய பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகமாக அமைகிறது. இதற்கு ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதுகுறித்து, தபால் நிலைய உயர் அதிகாரி கூறியதாவது: பெரியார் நகரில் அமைய உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் கட்டமைக்கப்பட்டு அடுத்த மூன்று மாதங்களில் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். சென்னையில் மட்டும் பொது தபால் நிலையத்தில் தபால் நிலைய பாஸ்போர்ட் சேவா கேந்திரா செயல்படுகிறது. அதன்படி தமிழகத்தில் 80 இடங்களில் பாஸ்போர்ட் முன்பதிவு செய்யப்படுகின்றன. திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மற்ற மையங்களில் நாள் ஒன்றுக்கு 40 விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. , கடந்தாண்டு தபால் நிலைய பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகம் மூலம் 65,327 பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post வடசென்னை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தபால் நிலைய பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகம்: பெரியார் நகரில் விரைவில் திறப்பு appeared first on Dinakaran.