வடலூர்: இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவு கூறும் வகையில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டம் வடலூரில் திரு இருதய ஆண்டவர் தேவாலயம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு திருப்பலிகள்,பிரார்த்தனைகள் நடைபெறும்.இதில் பார்வதிபுரம்,காட்டுக் கொல்லை,ஆபத்தானரணபுரம், தென்குத்து, மருவாய், கருங்குழி, கொளக்குடி, கல்குணம்,பெத்தநாயக்கன் குப்பம்,குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இதை முன்னிட்டு ஆலயத்தில் இயேசு கிறிஸ்து பிறப்பை குறிக்கும் விதமாக பிரமாண்டமான குடில் அமைக்கப்பட்டது. மேலும் இருதய ஆண்டவர் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டது.இதையடுத்து தேவாலய வளாகத்தில் அலங்காரப் பந்தல், பிரமாண்ட கிறிஸ்துமஸ் குடில்,தேவாலயம் முழுவதும் மின்விளக்குகள் அமைத்து ஜொலிக்கப்பட்டது. மேலும் இதனை முன்னிட்டு நேற்று இரவு பங்குத்தந்தை சூசைராஜ்,உதவி பங்கு தந்தைகள் ராஜா சேசுராஜ், பார்ட் அகஸ்டின் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பலியில் வடலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த பல்வேறு கிறிஸ்தவர்கள், பிற மதத்தினரும் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவு கூறும் விதமாக ஆராரோ ஆரிரரோ பாடலுடன் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட மாட்டு கொட்டகை போன்ற அமைப்பு கொண்ட பிரம்மாண்ட குடிலில் குழந்தை இயேசுவின் சுருபம் வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் உற்சாகத்துடன் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இந்தத் தேவாலய பங்கை சோ்ந்த பங்கு பேரவைகள், இளைஞர்கள்,பெண்கள் பணிக்குழு,மரியாயின் சேனைகள், வின்சென்ட் – தே- பால் சபை, பீடச்சிறுவர்கள், அருட் சகோதரிகள்,தன்னார்வ தொண்டர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
The post வடலூர் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாட்டம் appeared first on Dinakaran.