சென்னை: வந்தே பாரத் சரக்கு ரயில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வந்தே பாரத் ரயில்கள் தற்பொது இருக்கை வசதி கொண்டவையாக இயக்கப்படுகின்றன. விரைவில் ஸ்லீப்பர் வசதி கொண்ட ரயில்கள் இயக்கப்பட உள்ளது. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு சோதனை ஓட்டமும் நடைபெற்று வருகிறது. தற்போது வந்தே பாரத் ஸ்லீப்பர் பெட்டிகளை போல வந்தே பாரத் சரக்கு ரயிலும் அறிமுகம் செய்ய ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
தற்போது இ-காமர்ஸ் நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த பொருட்களை சப்ளை செய்ய விமானம் வழியாகவும், சாலை வழியாகவும் கொண்டு செல்கின்றன. விரைவில் பிளிப் கார்ட், அமேசான் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்களின் செல்போன்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் இந்த வந்தே பாரத் ரயில்களில் எடுத்து செல்லப்படவுள்ளது. வந்தே பாரத் சரக்கு ரயில் அறிமுகம் செய்யப்பட்டு அவற்றில் இத்தகைய பொருட்களை கொண்டு செல்லும் போது, வாடிக்கையாளர்களுக்கும் பயன்கிடைக்கும் என்பதொடு ரயில்வேக்கும் கணிசமான வருவாய் கிடைக்கும் என்பதால் ரயில்வே நிர்வாகம் இத்தகைய திட்டத்தை கையில் எடுத்து இருக்கிறது.
தற்போது இதற்காக ரயில்கள் தயாரிக்கப்பட்டு மும்பை – குஜராத் இடையே சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில் இருந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இந்திய ரயில்வே சரக்கு போக்குவரத்து மூலமே கணிசமான வருவாய் ஈட்டுகிறது. அதிலும் நிலக்கரி, ஸ்டீல், இரும்பு தாது, உணவு தானிய பொருட்கள், உரங்கள் ஆகிய சரக்குகள் மட்டுமே சரக்கு ரயில்களில் எடுத்து செல்லப்படுகிறது.
தற்போது உயர் மதிப்பு கொண்ட பொருட்களையும் எடுத்து செல்ல திட்டமிட்டு இருப்பதன் மூலமாக ரயில்வேயின் வருவாய் மேலும் அதிகரிக்கும். இதற்காக சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎப்) தயாரிக்கப்பட்டு வருகிறது. சுமார் 250 – 290 டன் வரையில் மதிப்பு மிக்க பொருட்களை கையாளும் வகையில் இந்த ரயில் இயக்கப்படும் என கூறப்படுகிறது.
இதேபோல் இந்த ரயில்களின் பெட்டிகளின் நீளம் அதிகபட்சமாக 13 மீட்டர் தொலைவு கொண்டதாக இருக்கும் எனவும், வந்தே பாரத் பார்சல் ரயில்கள் என்பது தற்போது ஆரம்பகட்ட நிலையில் இருப்பதாகவும், எனினும் பொருட்களை எடுத்து செல்லும் வகையிலான பெட்டிகளை தயாரிக்க அனைத்து தரவுகளையும் பெற்று வருவதாகவும் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். விலை மதிப்புமிக்க பொருட்கள் ரோஜாக்கள் மற்றும் மல்லிகை போன்ற ஏற்றுமதி பொருட்கள் ஆகியவற்றையும் இந்த வந்தே பாரத் சரக்கு ரயில்களில் எடுத்து செல்லும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.
The post வந்தே பாரத் சரக்கு ரயில் தயாரிக்க திட்டம் appeared first on Dinakaran.