மாநிலங்களுக்கான வரி பகிர்வு தொடர்பாக விவாதிக்கக் கோரி மக்களவையில் விசிக தலைவர் திருமாவளவன் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
இதுதொடர்பான நோட்டீஸில் கூறியிருப்பதாவது: மாநிலங்களுக்கான வரி பகிர்வை 41-ல் இருந்து 40 சதவீதமாக குறைக்க 16-வது நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜிஎஸ்டி, செஸ் போன்றவற்றால் மாநிலங்களின் வருவாய் ஏற்கெனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் வரி பகிர்வை 50 சதவீதமாக உயர்த்த வேண்டுமென்று பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் வரி பகிர்வை குறைக்க நினைப்பது நியாயம் இல்லை. எனவே மக்களவையில் நிதிப்பகிர்வு தொடர்பாக விவாதம் நடத்துவதற்காக அவையை ஒத்திவைக்க கோருகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.