வருசநாடு: வருசநாடு அருகே சேதமடைந்த தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். தேனி மாவட்டம், வருசநாடு அருகே மொட்டப்பாறை பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மூலவைகை ஆற்றின் குறுக்கே புதிதாக தடுப்பணை கட்டப்பட்டது. இந்த தடுப்பணை கட்டப்பட்ட பின்னர், வருசநாடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்டது. இதனால் விவசாயமும் செழிப்படைந்தது. இந்நிலையில் மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் தடுப்பணை சிறிது சிறிதாக சேதமடைய தொடங்கியது.
சமீப காலத்தில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தடுப்பணையின் கரைப்பகுதி உடைந்து சேதமடைந்துள்ளது. ஆனால் இதனை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. மேலும் தடுப்பணையின் இருபுறமும் கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவர்களும் சேதமடைந்துள்ளன. தற்போதைய நிலையில் தடுப்பணையில் தண்ணீர் தேங்காத நிலை உள்ளது. இதுகுறித்து இந்தப் பகுதி விவசாயிகள் கூறுகையில், “மூலவைகையில் வரும் தண்ணீரை தேக்கிவைக்க முடியாத நிலை உள்ளது. மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கரையோரத்தில் உள்ள தோட்டங்களில் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது. எனவே தடுப்பணையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
The post வருசநாடு அருகே சேதமடைந்த தடுப்பணையை விரைவில் சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள், விவசாயிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.