மத்திய பட்ஜெட்டில் மாத சம்பளதாரர்களுக்கு ரூ.12 லட்சம் வரை வருமான வரிச் சலுகை அளித்து, நடுத்தர மக்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது மத்திய அரசு. இந்தியாவில் அதிக வருமானம் உள்ளவர்கள் மட்டுமே வருமான வரி செலுத்தி வந்த நிலையில், காங்கிரஸ் ஆட்சியில்தான் நடுத்தர மற்றும் சாதாரண சம்பளம் வாங்குவோரும் வரி வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்துகிறோம் என்ற பெயரில் நடுத்தர சம்பளதாரர்கள் வரி வளையத்துக்குள் கட்டாயமாக நுழைக்கப்பட்டனர். மாத சம்பளத்தை வைத்து குடும்பச் சுமையையே சமாளிக்க முடியாமல் திணறி வந்த இப்பிரிவினர், வருமான வரி என்ற இன்னொரு சுமையையும் சேர்த்து சுமக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.
தணிக்கையாளர் ஒருவரை அமர்த்தி கணக்கு காட்டும் அளவுக்கு வருமானம் இல்லாத நிலையிலும், அதற்குரிய கட்டணங்களைச் செலுத்தி, ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு மேலாக இப்பிரிவினர் வருமான வரி கணக்கு காட்டும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டு இன்னலுக்கு ஆளாகி வந்தனர். ஒவ்வொரு பட்ஜெட்டின் போதும், நடுத்தர சம்பளதாரர்களை வருமான வரி வளையத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வந்தது. ஒவ்வொரு அரசும் அதைப் பொருட்படுத்தாமல் புறக்கணித்தே வந்தன.