* பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என அமைச்சர் எ.வ.வேலு உறுதி
மதுரை: சித்திரை திருவிழாவில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. மே 12ம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் அழகர் இறங்கும் வைபவம் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி தமிழக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் நேற்று காலை ஆய்வு செய்தனர்.
மதுரை தமுக்கம் மைதானம் முன்பிருந்து ஆய்வை துவக்கி, அழகர் ஆற்றில் இறங்கும் இடம், மீனாட்சி கோயில் பகுதிகள், வீர வசந்தராயர் மண்டபம் கட்டுமான பணிகள் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர். மதுரை தமுக்கம் துவங்கி கோரிப்பாளையம் வழியாக அழகர் வைகை ஆற்றில் இறங்கும் இடம் வரை நடந்தே சென்று அமைச்சர்கள், அலுவலர்களுடன் இந்த ஆய்வை மேற்கொண்டனர். அதேபோல், ஆரப்பாளையம் காமராஜர் பாலம் முதல் சமயநல்லூர் வரை அமைக்கப்படும் வைகை வடகரை பைபாஸ் சாலை, விரகனூர் முதல் சக்குடி வரை அமைக்கப்படவுள்ள புதிய பைபாஸ் திட்ட பணிகள் குறித்தும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: சித்திரை திருவிழாவிற்கு வரும் 10 லட்சம் பக்தர்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கும் பணி காவல்துறைக்கு உள்ளது. ஆனால், சமூக வலைத்தளங்களில் விழாவின்போது எங்கோ ஓரிடத்தில் நடைபெறும் அசம்பாவிதங்களை பூதாகரமாக்கி பெரிதாக்குகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை தடுக்கவே போலீசார் கண்டிப்பான முறையில் நடந்து கொள்ள வேண்டியுள்ளது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு தரமான உணவு கிடைக்க வேண்டும். இதற்காகவே மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்பேரில் உணவு பாதுகாப்பு துறையினர் அன்னதானம், நீர்மோர் வழங்குவோர் அதற்கான அனுமதி பெற வேண்டுமென கூறியுள்ளனர். அனைத்துத் துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து இந்த ஆண்டு விழாவுக்கு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.
* மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இந்த ஆண்டு இறுதிக்குள் குடமுழுக்கு விழா
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது: மதுரை சித்திரைப் பெருவிழா – 2025க்கான முன்னேற்பாடு பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் ஆகியவை முக்கிய நிகழ்வுகளாக திகழ்கின்றன. இப்பெருவிழாவில் 10 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பொதுமக்கள் பங்கேற்பார்கள்.
அதற்கேற்ப, போதிய முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். பொதுமக்களுக்கு குடிநீர், தற்காலிக கழிப்பறை வசதி போன்றவற்றில் மாநகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்திட வேண்டும். தூய்மை காவலர் குழுக்கள் அமைத்து உடனுக்குடன் சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும். மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு பேசினார்.
The post வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது சித்திரைத் திருவிழா ஏற்பாடுகள் மதுரையில் அமைச்சர்கள் ஆய்வு: 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.